புலி டீஸர் லீக்: பயிற்சி உதவியாளரிடம் போலீஸ் விசாரணை

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'புலி' படத்தின் ஒரு நிமிட வீடியோ டீஸரை திருட்டுத்தனமாக கசியவிட்டது தொடர்பாக, மிதுன் என்ற பயிற்சி உதவியாளரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'புலி' பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 20-ம் தேதி இரவு 12 மணிக்கும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸர் 21-ம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியாகும் என அறிவித்தார்கள்.

21-ம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாக இருந்த 'புலி' டீஸர், ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சிக்குள்ளானது.

டீஸர் லீக் ஆனதைத் தொடர்ந்து படக்குழு உடனடியாக இரவு 12 மணிக்கு வெளியிட இருந்த டீஸரை மதியமே இணையத்தில் அதிகாரபூர்வமக வெளியிட்டது.

இதனிடையே, முன்கூட்டியே திருட்டுத்தனமாக டீஸர் எப்படி வெளியானது என்பதை படக்குழு விசாரிக்க ஆரம்பித்தது. அப்போது, சென்னை ஃபோர் ப்ரேம்ஸ் ஸ்டூடியோவில், 'புலி' டீஸருக்கு சவுண்ட் மிக்சிங் செய்யும்போது வெளியானது உறுதிப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எப்படி வெளியானது என்பதை ஃபோர் ப்ரேம்ஸ் ஸ்டூடியோ குழுவினர் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

ஸ்டூடியோவில் பொறியாளருக்கு பயிற்சி உதவியாளராக இன்டர்ன்ஷிப் அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றி வந்த எம்.எஸ்.மிதுன் என்ற இளைஞர் மூலமாகவே டீசர் லீக் ஆனது தெரியவந்தது. பின்னர், விசாரணைக்காக அவர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE