காக்கா முட்டை உடைத்து நொறுக்கிய தமிழ் சினிமா மூடநம்பிக்கைகள்!

By சரா

காசி தியேட்டர் - இது 'தரை லோக்கல்' நோக்கர்கள் ஆதிக்கம் உள்ள திரையரங்கம் என்பது சென்னையை அறிந்த சினிமா ஆர்வலர்களுக்கு தெளிவாகத் தெரியும். அதுவும், இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சி என்பது 'மாஸ் மசாலா' படங்களுக்கான ரகளையான கொண்டாட்டங்களுக்கு உரியது என்பது மிகவும் தெளிவு.

இந்தத் திரையரங்கின் இரவுக் காட்சியில் 'காக்கா முட்டை' படத்தை ரசித்தபோது கிடைத்த அனுபவம், தமிழ் சினிமாவின் 'சாதாரண ரசிகர்கள்' என்று அசாதாரண கலை ஆர்வலர்கள், முக்கிய படைப்பாளிகள் சிலர் சொல்லி வரும் பல 'மித்'துகளைக் கொத்துபரோட்டா போட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு முதல் நாள் காட்சிகளில் கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் 'காக்கா முட்டை'க்கு கிடைத்தது வியப்பை அளித்தது.

பல்வேறு முக்கிய விருதுகளைக் குவித்துவிட்டாலோ, முக்கியப் பட விழாக்காளில் பங்கேற்றுவிட்டாலோ 'இது கலைப் படைப்பு. சாதாரண ரசிகர்களுக்கு பார்க்கப் பொறுமை இருக்காது. சில தியேட்டர்களில் ஒரு காட்சி மட்டுமே போதும்' என்றெல்லாம் சினிமா துறையைச் சேர்ந்தவர்களே கருதுவது உண்டு. எல்லா சினிமாவும் கலைப் படைப்புகள்தானே? யார் இப்படி மோசமாகக் கொளுத்திப் போட்டது என்றுதான் இதுவரையிலும் தெரியவில்லை.

இப்படி குருட்டாம்போக்கில் கொளுத்திப் போடுவதன் விளைவுதான், நம் சமூகத்தில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை சினிமா மொழியில் பதிவு செய்யும் நல்ல படைப்புகள், தியேட்டரில் சாதாரண மக்களுக்குக் காணக் கிடைக்காமல் போவதற்கு வழிகுக்கிறது.

சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் சில படைப்புகள் சில நேரங்களில் சினிமா ரசிகர்கள் பலரைக் கவராததும் சாதாரண விஷயம்தான். அத்தகைய படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா மொழியோ, உத்திகளோ ரசிகர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லுவது சுத்த மூடநம்பிக்கை என்பதையே 'காக்கா முட்டை' நிரூபித்திருக்கிறது.

இயல்பு வாழ்க்கையைச் சொல்லும் காட்சிகளையும், வசனங்களையும் துல்லியமாக உள்வாங்கி ரசிக்கத்தக்கவர்கள்தான் சில ஜீனியஸ்கள் சொல்லும் சாதாரண ரசிகர்கள் என்பதை காக்கா முட்டையின் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் ரசிகர்கள் அளித்த வரவேற்பு காட்டிக் கொடுத்தது. ரகளையான நகைச்சுவை தருணங்களை ரவுண்டு கட்டி களேபரம் செய்த அதே ரசிகர்கள், நெஞ்சுக்கு பாரத்தைக் கடத்தும் தருணங்களில் பின்-ட்ராப் சைலன்ட் காட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற சினிமாவைத் தயாரிக்க முன்வந்ததற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் லாபம் ஈட்டும் கலைஞர்கள், தங்கள் துறையின் தரத்தை மேம்படுத்த உறுதுணைபுரிவது கடமை. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள். காக்கா முட்டை முயற்சிக்காக இவர்களைப் பாராட்டினால், கல்லா கட்ட மட்டுமே தமிழ் சினிமாவைப் பயன்படுத்தும் பலரைக் கழுவியூற்ற வேண்டிய சூழல் எழும் என்பதால் இதோடு இந்த மேட்டரை நிறுத்திக்கொள்கிறேன். இந்த இடத்தில், தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சிம்பு இந்தப் படத்தில் அளித்த பங்களிப்பையும் பாராட்டச் சொல்கிறது மனம்.

காக்கா முட்டையில் தனுஷ் - வெற்றிமாறனின் பங்களிப்பில் பாராட்டுக்குரியது என்றால், இந்தப் படத்தைப் பிரபலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் உத்திகளையும் சொல்லலாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரம்மாண்ட செலவு செய்வது போன்ற நடவடிக்கை மூலம் பிரபலப்படுத்தி, கடைசியில் ரசிகர்களைப் படுத்துவதற்கு பதிலாக, முழுமையாகத் தயாரான நல்ல படைப்புகளைப் பிரபலப்படுத்த மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளும் வரவேற்கத்தக்கதே. இவ்விருவர் வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்றும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மணிகண்டன்கள் பலரை அடையாளம் காணலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

மிக முக்கியமாகச் சொல்லியே தீர வேண்டிய ஒன்று... தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் கச்சிதமாக ஆக்‌ஷன் செய்வதை பெரிய காக்கா முட்டையையும், ரியாக்‌ஷன் செய்வதை சின்ன காக்கா முட்டையையும் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் என்றே கருதவைத்தது இரண்டு சிறுவர்களின் நடிப்பாற்றல்.

உலக அளவில் மிகப் பெரிய அளவில் லாபமும் புகழும் ஈட்டும் படைப்பாளிகளைப் பட்டியலிட்டால், அதில் சிறுவர்களுக்கு எழுதுவோர் - படைப்பவர்கள் தான் அதிகம் இடம்பெறுவர். ஆனால், இங்கே தமிழ் இலக்கியச் சூழலில், என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், சிறுவர் இலக்கியத்தின் மீது ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐந்து விரல்களுக்குள் அடங்கிவிடும். அப்படி எழுத முற்படுபவர்களை, குழந்தைத்தனமாக பார்க்கும் சக இலக்கியவாதிகளின் பார்வையால் சிறார் இலக்கியம் மீதான ஈடுபாடே எவருக்கும் இல்லாமல் போய்விடுகிறது.

இதே நிலைதான் தமிழ் சினிமாவிலும். சிறார் சினிமாவைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கான - சிறார் ரசனை உள்ளவர்களுக்கான சினிமா, பெரியவர்களுக்கான - 18 வயதுக்குட்பட்ட மனமுதிர்ச்சி மிக்க சிறுவர்களுக்கான சினிமா, இந்த இரண்டு தரப்பின் தேவையையும் பூர்த்தி செய்யும் சினிமா என மூன்று வகையாக பிரிக்கலாம். காக்கா முட்டை மூன்றாம் ரகம். பெரியவர்களுக்கான சிறார் சினிமா மட்டுமல்ல - சிறுவர்களுக்கான ப்யூர் சினிமாவும்கூட.

மாஸ், மசாலா, காதல், கலாய்ப்பு, அதிரடி சினிமா கூடாது என்பதெல்லாம் இல்லை. சினிமா எந்த வடிவத்திலும் வரலாம். ஆனால், இந்த மாதிரியான ஓவர் சீன் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு படைப்பாளியைச் சுற்றியிருக்கும் கதைகளையும் வாழ்க்கையையும் தொழில்நுட்ப உதவிகளுடன் சுவாரசிய சினிமா விருந்தாக அமையக் கூடிய படங்களும் வரவேண்டும் என்பதே விருப்பம்.

மக்களின் ரசனையைக் குறைசொல்லிக் கொண்டே குத்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடுவது இனியும் நீடிக்காது என்பதையே காக்கா முட்டைக்கு நிறையும் அரங்குகள் சொல்லும் சேதி.

மிகச் சிறந்த நகைச்சுவைகள், மனதைத் தைக்கும் நெகிழ்ச்சிகள் என திரையில் எவை வந்தாலும், இழவு வீட்டில் அழாமல் உம்மென்றிருப்பது போன்ற மனநிலையுடன் மல்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் சோ-கால்டு ஏ சென்டர் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கத் தெரிகிறதா என்பதே இப்போது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

வெற்று கலாய்ப்புகளுக்குக் கூச்சலிடுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்ட ரசிகர்கள், இந்தியப் பொருளாதார நிலை, ஏழ்மையின் வலி, பிழைப்பு அரசியல், வருவாய் பாகுபாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் சமூகக் கலாய்ப்பு (Social satire) காட்சிகளையும் வசனங்களையும் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரியாக்ட் செய்தபோது, அவர்கள்தான் உண்மை சினிமாவின் ரசிகர்கள் என்று உணர்ந்தேன்.

காக்கா முட்டை படைப்புக் குழுவின் முயற்சிகளைப் பார்த்தாவது, 'தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டதுதான். அவர்களை நாம் தவறாகப் புரிந்துகொண்டு இதுவரையில் மேகி செய்து வயிற்றை நிரப்பிவிட்டோம். இனியாவது நல்லிடியாப்ப விருந்து அளிப்போம்' என்று முக்கியப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தமிழ் சினிமா சமூகமும் உணர வேண்டும்.

எனக்குத் தனிப்பட்ட முறையில், காக்கா முட்டை படத்தின் பல காட்சிகள் தியேட்டரில் சிரிப்பை வரவழைத்தன. அதேகாட்சிகளை வீட்டுக்கு வந்து யோசித்தபோது, அவை தந்த வலிகள் சொல்லி மாளாது. இதற்கு, சின்ன காக்கா முட்டை 'சிட்டி சென்டரை'ப் பார்த்து ரியாக்டும் தருணத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

ம்... நீங்கள் கேட்பது என் காதுகளுக்குக் கேட்கிறது. காக்கா முட்டை படத்தின் கதை என்ன? திரைக்கதை என்ன? வசனங்கள் என்ன? என்றெல்லாம்தானே கேட்கிறீர்கள். தமிழில் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிடும் சினிமா விமர்சனத்தைப் படியுங்கள். பெரும்பாலான விமர்சனங்களின் முக்கால்வாசி பகுதியைத்தான் நீங்கள் கேட்கும் விஷயங்கள் ஆக்கிரமித்துவிடுங்கின்றனவே!

| பின் குறிப்பு: இம்மாதம் 19-ம் தேதி வெளியிடும் 'குற்றம் கடிதல்' என்ற படத்தை, கடந்த ஆண்டு டிசம்பரில் திரைப்பட விழா ஒன்றில் பார்த்தேன். காக்கா முட்டை ரிலீஸாகி சில தினங்களில் அப்படம் வெளிவருவது, தமிழ் சினிமாவின் புத்தெழுச்சி மீதான வியப்பின் கால அளவை மேலும் கூட்டும் என்பது உறுதி. |

சரா - தொடர்புக்கு: saravanan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்