நடிகர் சங்க தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை வார நாட்களில் நடத்தாமல் வார விடுமுறை நாட்களில் நடத்த உத்தரவிட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சங்க துணை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, சங்கத் தேர்தலுக்காக நிர்வாகக் குழுவின் அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஜூன் 1-ம் தேதி நடந்த சங்க செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் குறித்து சங்கத் தலைவர் முடிவெடுத்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான அறிக்கையை ஜூன் 5-ம் தேதி வெளியிடுவதற்கு முன்னரே தேர்தல் நடத்துவதற்கான இடம் முடிவு செய்யப்பட்டு, அதற்காக 24-4-15 அன்றே ரூ.60 ஆயிரத்தை சங்கம் செலுத்தியதற்கான ரசீதை சினிமா இசையமைப்பாளர்கள் அறக்கட்டளை கொடுத்திருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

அதேநாளில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்காக ஜூன் 14 முதல் 16-ம் தேதி வரை சினிமா இசைக்கலைஞர்கள் அறக்கட்டளை அரங்கம் மற்றும் ஜி.வி.கே. மினி ஹால் ஏசி-யும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறைக்கு சினிமா இசைக்கலைஞர்கள் அறக்கட்டளை கடிதம் எழுதியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம், சங்கத் தேர்தல் குறித்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே, தேர்தலுக்கான இடமும், தேதியும் முடிவு செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கில் இடைக்கால தடை வழங்குவதற்கான அடிப்படை ஆதாரம் உள்ளது. எனவே, தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தல் குறித்து அதன் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிக்கை முற்றிலுமாக செல்லாது.

அதேநேரத்தில், பிரதான வழக்கை நீண்டகாலத்துக்கு தள்ளிவைக்க முடியாது. சங்க தேர்தலை விரைந்து முடிக்க வேண்டியுள்ளது. எனவே, சங்கத்தின் சார்பில் இரு வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். அதற்கு விளக்கம் அளிப்பதாக இருந்தால் அடுத்த இரு வாரங்களுக்குள் மனுதாரர்கள் விளக்கம் தர வேண்டும். அதையடுத்து தீர்ப்புக்காக இவ்வழக்கை பட்டியலிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முதல் வெற்றி

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் குறித்து நடிகர் விஷால் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் தேதியை மாற்ற வேண்டும், தேர்தல் நடக்கவிருக்கும் இடத்தை மாற்ற வேண்டும், ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்தோம். இந்நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேல் முறையீடு செய்யப்படும்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது, “நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை படித்தபிறகுதான் மற்ற விஷயங்களை பேச முடியும். தேர்தலில் போட்டியிட்டு பெறுவதுதான் வெற்றியே தவிர மற்றபடி அறிக்கைவிடுவது வெற்றியாகாது’’ என்றார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்டபோது, “நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூடி ஒட்டுமொத்த உறுப்பினர்களுடைய ஒப்புதலைப் பெற்றே தேர்தல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக இப்போது உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இன்னும் ஓரிரு நாட்களில் மேல் முறையீடு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE