சூடுபிடிக்கும் நடிகர் சங்க கட்டிட விவகாரம்: சரத்குமார் - விஷால் நேரடி மோதல்

By கா.இசக்கி முத்து

இன்னும் சில மாதங்களில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் சங்கத்தின் கட்டிட விவகாரம் தொடர்பாக தற்போதைய தலைவர் சரத்குமார் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே நேரடி மோதல் உருவாகி இருக்கிறது.

கட்டிட விவகாரத்தின் பின்னணி

நடிகர் சங்கத்திற்கு என்று தனியாக கட்டிடம் வேண்டும் என மறைந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, அஞ்சலி தேவி உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் இணைந்து வாங்கிய இடம் தான் டி.நகர் ஹபிபுல்லா சாலையில் இருக்கும் இடம். அந்த இடத்தின் மொத்த நிலப்பரப்பு 18 கிரவுண்ட் ஆகும். நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் பதிவியேற்ற பின்பு, நடிகர் சங்கத்திற்கான வருமானத்தைப் பெருக்க வேண்டும் என SPI CINEMAS நிறுவனத்திற்கு ஷாப்பிங் மால் கட்டுவதற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், இந்தக் குத்தகையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கேள்வி எழுப்பும் நாசர்

இந்தக் கட்டிட விவகாரம் தொடர்பாக, நடிகர்கள் நாசர் மற்றும் விஷால் இருவருமே நிலம் குத்தகை விட்ட விவகாரத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக நாசர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் "குழம்பி கிடக்கும் இக்கட்டிடப் பிரச்சினை குறித்து மட்டுமே ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டி உள்ளும் புறமும் தெளிவாகத் தெரியும் வகையில் வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டாலே போதும் தங்கள் மீதும் மற்ற நிர்வாகிகள் மீதும் பனியென சூழ்ந்திருக்கும் சந்தேகங்கள் மறைந்துவிடும்.

திரையுலகப் பிரச்சினைகளில் நம் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாகப் பங்கெடுத்து தீர்வு காண்கிறது என்பதை நான் நன்கறிவேன். அதேபோல் நடிகர் சங்கப் பிரச்சினைகளையும் பார பட்சமற்று அணுக வேண்டும் என்பது தான் எல்லா சங்க உறுப்பினர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும்." என்று கேட்டிருந்தார்.

மேலும், "சரத்குமார் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஒரு நடிகர் சங்க கூட்டத்தை கூட்டி அக்கட்டிடத்தின் தற்போதையை நிலை மற்றும் வழக்கின் நிலை என்ன என்பதை அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதைச் சொன்னா உடனே நடிகர் சங்கத்துக்கு எதிராகவும், சங்கத்தை உடைக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள் என தெரிவிக்கிறார்கள். இக்கட்டிடத்தின் வழக்கு தொடர்பாக வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்." என நாசர் தெரிவித்தார்.

ஒப்பந்த விவகாரத்தில் நிலவும் சிக்கல்

ஒரு நிறுவனம் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டும் போது, 9 நிர்வாகிகள் கையெழுத்து இட வேண்டும். ஆனால், SPI CINEMAS உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி இருவர் மட்டுமே கையொப்பம் இட்டு இருக்கிறார்கள். மேலும், இது போல ஒப்பந்தம் போடப் போகிறோம் என்று உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்கமால், ஒப்பந்தம் செய்து விட்டு வந்து தெரிவிக்கிறார்கள் என கொந்தளிக்கிறார்கள் நடிகர்கள்.

சரத்குமாரிடம் விஷால் எழுப்பும் மூன்று கேள்விகள்

இந்த நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் முதலில் இருந்தே கேள்வி எழுப்பி வருபவர் நடிகர் விஷால். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு சென்று நாடக நடிகர்கள் இக்கட்டிடம் தொடர்பாக என்ன நினைக்கிறார்கள் என்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

தற்போது இக்கட்டிட விவகாரம் தொடர்பாக பேசிய போது, "நானும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி தான் வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற பதில் மட்டுமே அறிக்கையை ஆக கொடுத்து வருகிறார் தலைவர் சரத்குமார்.

எனக்கு மறுபடியும் மறுபடியும் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது போர் அடிக்கிறது. நான் தலைவரிடம் 3 கேள்விகளை மட்டுமே கேட்கிறேன். அதற்கு அவரை விடை அளிக்க சொல்லுங்கள்.

1. கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதி சந்துரு 'நடிகர் சங்கத்தில் எதுவும் சரியில்லை' என்று தீர்ப்பளித்திருக்கிறார். அந்த வழக்கின் மேல்முறையீட்டை நீதிபதி பானுமதி மற்றும் சசிதரன் இருவருமே தள்ளுபடி செய்துவிட்டார்கள். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை தலைவர் சரத்குமார் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

2. 13-ம் சட்ட விதியின்படி காமெடி நடிகர் குமரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்து சின்ன விஷயத்திற்காக நீக்கினார்கள். நடிகர்களை துணைத் தலைவர் காளை "நாய்கள்" என திட்டினார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கேட்டால், அவர் பெரிய பதவி மற்றும் நடிகர் சங்கத்துக்காக உழைக்கிறார் என்கிறார்கள். நடிகர் சிங்கமுத்து இந்த நாட்களாக நடிகர் சங்கத்துக்கு உழைத்ததை விடவா காளை உழைத்துவிட்டார். காளை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

3. நடிகர் சங்க உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் SPI CINEMAS இடம் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? ஒப்பந்தம் போடப்பட்ட முன்பு அனைவரிடமும் தெரிவித்ததை ஏன் ஒப்பந்தம் போடப்படும் முன்பே தெரிவிக்கவில்லை?

இந்த கேள்விகளுக்கு தலைவர் பதில் சொல்லட்டும். மேலும், அக்டோபர் 2014ல் ஜனவரி 2015க்குள் இக்கட்டிட விவகாரத்திற்கு தீர்வு காணப்படும். அவ்வாறு காணப்படவில்லை என்றால் விஷால் மற்றும் அவருடன் இருப்பவர்கள் சொல்வது போல பண்ணிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார் தலைவர் சரத்குமார். தற்போது ஜூன் மாதம் வந்துவிட்டது சொன்ன வார்த்தைகளை எப்போது காப்பாற்றுவார்?" என்று கூறினார்.

விரைவில் பதிலளிப்பேன்: நடிகர் சரத்குமார்

இப்பிரச்சினைகள் தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் கேட்ட போது, "வழக்கு தொடர்பாக பலமுறை கூறிவிட்டேன். ஒரே விஷயத்தை மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டே இருக்க முடியாது. நடிகர் சங்கத் தேர்தல் வருவதை முன்னிட்டு குழப்பங்கள் விளைவிக்கவே முயற்சித்து வருகிறார்கள். நாசர் எனக்கு எழுதிய கடிதத்தை எதற்காக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அனுப்பினார் என்று தெரியவில்லை. அவருக்கு விரைவில் பதிலளிப்பேன்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்