மாஸ் படத்துக்கு வரிச்சலுகை கிடைக்காதது ஏன்?- ரகசியம் உடைத்த சினேகன்

By ஸ்கிரீனன்

'மாஸ்' படத்துக்கு வரிச்சலுகை ஏன் கிடைக்காததற்கான காரணத்தை 'சாந்தன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சினேகன் தெரிவித்தார்.

மாதேஸ்வரன் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் 'சாந்தன்'. காஷிஹா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை சாம்ராஜ் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜாக்குவார் தங்கம், எஸ்.வி.சேகர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் பாடலாசிரியர் சினேகன் பேசியது:

"பெரிய படங்களுக்கு ஒரு சென்சார், சின்ன படங்களுக்கு ஒரு சென்சார் என்று குறிப்பிட்டார்கள். குறிப்பிட்ட 4 பேர் மட்டுமே சென்சார் போர்டில் இல்லை. 5 அல்லது 6 பேர் குழுவாக இணைந்து தான் சென்சாருக்காக படம் பார்ப்பார்கள்.

உண்மையில் சில பேர் சில நேரத்தில் விலை போய் விடுகிறார்கள். இதை நான் சொல்லலாம், ஆனால் எஸ்.வி.சேகரால் அதிகாரத்துக்கு விலை போகிறார்களா, பணத்துக்கு விலை போகிறார்களா, அதிகாரிகளுக்கு விலை போகிறார்களா என்பது தெரியாது. ஆனால் அதையும் மீறி ஒரு உண்மை விஷயத்தைச் சொல்கிறேன். சில நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'மாஸ்' படத்துக்கு வரிச்சலுகை கிடையாது. சன் டி.வி தொலைக்காட்சிக்கு உரிமம் கொடுத்ததால் தான் வரிச்சலுகை கொடுக்கவில்லை என்கிறார்கள். 'மாஸ்' என்பது தமிழ் பெயர் இல்லை, அது தான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மை காரணம் என்ன தெரியுமா?

அப்படத்தில் 'ஈழத் தமிழ் பேசுகிறவனா... உன்னை உதைக்க வேண்டும்' என்று ஒரு வசனம் வருகிறது. அதை கோடிட்டு, "ஈழத்தமிழையும், ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இப்படத்துக்கு வரிச்சலுகை கிடையாது" என்று ஓர் அதிகாரி எழுதியிருக்கிறார்.

இப்படிப்பட்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அந்த அதிகாரியின் நேர்மைக்கு நிறைய அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படக்குழு வசனத்தை எல்லாம் மாற்றி, அந்த அதிகாரியிடம் போய் பேசியிருக்கிறது. ஆனால், படத்தில் இருந்த வசனத்திற்கு மாற்று வசனம் எல்லாம் போட்டு மாற்றி இருக்கிறார்கள்" என்று பேசினார் பாடலாசிரியர் சினேகன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE