நூறு படங்களில் காமெடியனாக நடித்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துக்குப் பிறகு தனி ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் படம் 'இனிமே இப்படித்தான்'.
தான் செய்யும் காமெடிக்கு ஸ்கிரிப்ட் எழுதும் முருகன் - ஆனந்த் என்ற இரட்டையர்களை ஒரே படத்துக்கு இயக்குநர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார் சந்தானம்.
ஆஷ்னா ஸவேரி மீண்டும் சந்தானத்துடன் நடித்துள்ள படம் என்ற இந்த காரணங்களே இனிமே இப்படித்தான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? சந்தானத்துக்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்துக்கொண்டாரா?
ட்ரெய்லரை ஒரு முறை ஓட்டிப் பார்த்துவிடலாம்.
''என்ன லவ் பண்ண வந்தியா?''
''பின்னே லாண்டரிக்கு துணி போடவா வந்தேன். டிரஸ் பண்ணி வந்திருக்குறதைப் பார்த்தா தெரியல...''
*
''திரும்பிப் பார்க்கிறாளா பாரு...''
''இல்லையே...''
''இப்போ... ''
''சட்டை கூட பண்ணலை...''
''அப்போ கன்ஃபார்மா லவ் தாண்டா ''
''திரும்பிப் பார்த்தாதானே லவ்வு...''
''எப்படியும் அவ திரும்பிப் பார்க்க மாட்டா. எதுக்கு மனசு கஷ்டப்படணும். அதான் நமக்கேத்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதானே... ''
*
''உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையா...''
''வெளியே போறேன்னு எங்க அப்பா வாங்கினு போய் இருக்காரு...''
*
''ரெண்டு பொண்ணுங்களை மெயின் டெய்ன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?''
''அதை விட கஷ்டம் உன் மூஞ்சை கிட்ட பார்க்குறது...''
*
இது ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால், கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ட்ரெய்லரில் சில நகாசு வேலை செய்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் கதைக்குள் அப்படியே பிரதிபலிக்கவில்லை.
கதை?
மூன்று மாதத்துக்குள் சந்தானத்துக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்கிற 'பெரிய' நோக்கத்தில் சந்தானத்தின் பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கின்றனர். இடையில், சந்தானத்துக்கு ஆஷ்னா ஸ்வேரியுடன் காதல் முளைக்கிறது. அந்த தருணத்தில் அகிலா கிஷோருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இருவரில் சந்தானம் யாரை கல்யாணம் செய்துகொள்கிறார்? என்ற 'பெரிய?' ட்விஸ்ட்டுடன் படம் முடிகிறது.
வேலை வெட்டிக்குப் போகாமல் ஜாலியாய் சுற்றும் தமிழ் சினிமாவின் வழக்கமான 133-வது ஹீரோவாக சந்தானம். சந்தானத்தின் என்ட்ரிக்கு வழக்கம்போல கைதட்டல் கிடைத்தது.
விசில் அடிக்கும் அளவுக்கு பன்ச் பேசுவது, ஸ்டைலிஷாக நடப்பது என்று ஹீரோ மெட்டீரியலாக முயற்சித்திருக்கிறார் சந்தானம். அது ரசிகர்களிடத்திலும் எதிரொலித்தது. ஆனால், ரொமான்டிக் கதையில் புன்னகை கூட செய்யாமல் உம்மென்று இருக்கிறார்.
ஃபாஸ்ட் பீட் டான்ஸில் சமாளிக்கும் சந்தானம் ஸ்லோ பீட் மூவ்மென்ட்களில் திணறுகிறார். சண்டைக் காட்சியில் சந்தானத்துக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.
ஆனால், சந்தானம் நடிப்பில் எந்த முதிர்ச்சியும் இல்லை. எமோஷன் காட்சிகளிலோ, ரொமான்ஸ் காட்சிகளிலோ சந்தானத்திடம் எந்த வளர்சிதை மாற்றமும் இல்லை. இதனால் ரசிகர்களிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
"நாங்க லவ் பண்றோம்னு நிரூபிக்க என்னென்னவோ பண்றோம். நீங்க லவ் பண்ணலைன்னு நிரூபிக்க மாட்டீங்களா? பசங்கதான் பண்ணணுமா?" என சந்தானம் ஆஷ்னாவிடம் கேட்கும்போது பசங்க கைதட்டலும், விசிலும் அரங்கத்தை அதிரவைத்தது. ரசிகர்கள் அதிக நேரம் கைதட்டி கொண்டாடியது இந்த காட்சியில் மட்டும்தான்.
மேக்கப் அப்பிய முகத்துடன் 'ப்ப்பா...' சொல்ல வைக்கிறார் ஆஷ்னா ஸவேரி. துடுக் வெடுக் கோபமும், ''லவ் யூ ... கொடு'' என்று கேட்பதுமாக ஜீவனே இல்லாமல் நடித்திருக்கிறார். ஆஷ்னா ஸவேரியின் லிப்ஸ்டிக் கூட அலற வைக்கிறது.
அகிலா கிஷோர் கேரக்டருக்கேற்றார் போல வந்து போகிறார். இன்னும் நடிக்க மெனக்கெட்டிருக்கலாம்.
போகிற போக்கில் தம்பி ராமய்யா தான் சில இடங்களில் சிரிக்க வைத்து ரிலாக்ஸ் செய்கிறார்.
தந்திர சமையல் செய்யும் கும்பலும், சிங்கமுத்துவும் கூட காமெடி என்கிற பெயரில் போங்காட்டம் ஆடி இருக்கிறார்கள்.
அந்த இடைவேளை ட்விஸ்ட் நன்றாகவே எடுபடுகிறது. ரசிகர்கள் நல்ல பிரேக்ல என்று சொல்ல வைக்கிறார்கள்.
சந்தானம் காமெடியனாக நடிக்கும்போது வர்ற சிரிப்பு, ஹீரோ ஆகி காமெடி பண்ணும்போது வரலை மச்சான் என்று சீரியஸாக என்னிடம் ஸ்நாக்ஸ் கொறித்தபடி இடைவேளையில் குயிக் ரிவ்யூ கொடுத்தார் நண்பர். கதைன்னு எதுவுமே இல்லையே. இனிமேவாச்சும் வருதான்னு பார்ப்போம். சந்தானத்துக்கு ரொமான்ஸ் வரவே இல்லையே என்று அவரது தோழி தன் பங்குக்கு கமெண்ட் செய்தார்.
இடைவேளை முடிந்ததும் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
சம்பந்தமே இல்லாமல் பாடல் காட்சிகள் வந்துபோய்க்கொண்டிருந்தன.
விடிவி கணேஷ் பேசும் டோன் வருகிற சிரிப்பையும் காணாமல் போன பட்டியலில் சேர்த்து வைக்க வழிசெய்தது.
நரேன், பிரகதி, லொள்ளு சபா மனோகர், புஜ்ஜி பாபு ஆகியோர் கேரக்டருக்கேற்ற நடிப்பை கொடுத்துவிட்டு அக்கடா என்று ஆகிறார்கள்.
சந்தோஷ்குமார் தயாநிதி இசையில் பாடல்கள் சுமார் ரகம். எந்த பாடலும் பெரிதாய் ஒட்டவே இல்லை. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ஃப்ரெஷ் லுக் தருகிறது. ஆனால், அதுவே ஒரு கட்டத்தில் பளபள என இருப்பது உறுத்துகிறது.
ஆண்டனி எல்.ரூபன் இன்னும் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் போதும் போதும் என்கிற அளவுக்கு பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏன் எல்லாவிதமான இம்சையையும் வரவழைக்கிறது.
படம் முடிந்ததும் அவசர அவசரமாக தியேட்டரை விட்டு வெளியேறியபோது, "ப்பா.. எந்த லாஜிக்கும் இல்லை... கதையும் இல்லை... காமெடி இருந்தா போதும்னு மொக்கை பண்ணிட்டாங்களே' என்று ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்குள் கருத்து சொல்ல எல்லாரும் புயலென புறப்பட்டது போல் ஒரு மாயை.
'இனிமே இப்படித்தான்' என்று சொல்லியிருக்கிறார் சந்தானம். 'இனிமே இப்படித்தான்'னு இனி இன்னொரு படம் பண்ணிடாதீங்க ப்ளீஸ் என்றுதான் கேட்கத் தோணுது.
அப்புறம்... இந்தப் படத்தின் கடைசி காட்சிகளைப் பார்த்தபோது எனக்கு ஏன் பாக்யராஜின் 'சின்னவீடு' படம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago