நடிகர் சங்கத்தை மிரட்டவே வழக்கு தொடர்ந்துள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் ராதாரவி பதில் மனு தாக்கல்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை மிரட்டுவதற்காகவே நடிகர் விஷால் உள்ளிட்டவர்கள் வழக்கு தொடர்ந் துள்ளனர் என்று சங்க பொதுச் செயலாளர் ராதாரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரியும் நடிகர்கள் விஷால், நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தென்னிந் திய நடிகர்கள் சங்க பொதுச் செய லாளர் ராதாரவி பதில் மனு தாக்கல் செய்தார். அதன் விவரம்:

இச்சங்கத்தில் 3,200 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோருவது இப்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. தனியார் அமைப்புகள், சங்கங்கள், கிளப்புகள் போன்றவற்றின் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு நடத்த வேண்டும் என்று கோருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வார விடுமுறை நாட்களில் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது. இதற்கு முன்பு வார நாட்களிலே தேர்தல் நடந்துள்ளது. அப்போது 75 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள் வார நாட்களில் வந்து வாக்களிப்பதில் ஒன்றும் சிரமமில்லை. தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் காலை 9 மணிக்குத்தான் தொடங்கும். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 வரை போக்குவரத்து நெரிசல் குறைவாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் உறுப்பினர்கள் வந்து வாக்களிக்கலாம்.

தேர்தல் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டுள்ள சினிமா இசைக்கலைஞர் கள் சங்க வளாகத்தில் வாகன நிறுத்தத்துக்கு போதிய இடவசதி உள்ளது. இங்கு மட்டுமல்லாமல், ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்திலும் வாகனங் களை நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி குறித்து நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் மட்டுமே ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். சங்கத்துக்கும், தனியார் திரைப்பட நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கையும் வாபஸ் பெறத் தயாராக இருப்பதாகவும் மறைமுகமாக கூறி யுள்ளனர். நடிகர் சங்கத்தை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, இம்மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுவில் ராதாரவி கூறியுள்ளார்.

இவ்வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE