பாகுபலியும் 2,000 பாடி பில்டர்களும்: ராஜமெளலி சிலாகிப்பு

By ஸ்கிரீனன்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

'பாகுபலி' தமிழ் பதிப்பின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 'பாகுபலி' படக்குழுவினர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவில் இயக்குநர் ராஜமெளலி பேசியதாவது: "மும்பை உள்ளிட்ட பல ஊர்கள்ல மேடை ஏறி பேசியிருக்கிறேன். ஆனால், சென்னையில் பேசும் போது மட்டும் தான் ரொம்ப உணர்ச்சிவசமாக இருக்கும். ஏனென்றால், நான் பிறந்தது, படித்தது, சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டது எல்லாமே இந்த மண்ணில் தான். என்னை சினிமாக்காரனாக உருவாக்கியது சென்னை தான்.

'பாகுபலி'யில் போர்க் காட்சிகளைத்தான் மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கியிருக்கிறோம். அக்காட்சிகளுக்காக மட்டும் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 2000 பாடி பில்டர்களை தினமும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்து, உடைகள் கொடுத்து, மேக்கப் போட்டு கேமிரா முன்னாடி நிற்க வைப்பதே ஒரு மிகப்பெரிய வேலை.

கிராபிக்ஸ் காட்சிகளுக்காக 1000 மீட்டருக்கு மேல் ப்ளூ மேட் இருக்கும். அதை நிற்க வைக்க 500 ப்ரேம் இருக்கும். காற்று அடித்தால் ப்ளூ மேட் ஆடும், அதை பிடித்துக் கொள்ள 50 பேர் இருப்பார்கள். ஒரு பெரிய கும்பலே இருக்கும், இப்போது எப்படி பண்ணினோம் என்று யோசித்தால் பயமாக இருக்கிறது.

சாபுசிரில், மரகதமணி, செந்தில், பீட்டர் ஹெய்ன், ஸ்ரீனிவாஸ் மோகன் என இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்களை அனைவரையும் நிர்வகித்தது நிர்வாக தயாரிப்பாளர் ஸ்ரீவள்ளி தான். இப்படக்குழுவில் உள்ள அனைவருமே சொல்லுவார்கள் ஸ்ரீவள்ளி இல்லாமல் இப்போர்க் காட்சிகளை படமாக்கி இருக்க முடியாது.

தமிழ் ரசிகர்கள் அனைவருமே உங்களில் ஒருவனாக என்னை பார்த்து வருகிறீர்கள். அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை" என்று ராஜமௌலி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE