நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து வழக்கு: ராதாரவி பதில் மனுதாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனுதாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நடிகர்கள் விஷால் கிருஷ்ணா, நாசர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படியும், நம்பிக்கைக்குரிய வகையிலும் நடைபெற வில்லை. சங்கத்தின் துணை விதி 37-ன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சங்க துணை விதி 38-ன்படி இத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக ஒரு தேர்தல் அதிகாரி மற்றும் 2 உதவித் தேர்தல் அதிகாரிகளை சங்க செயற்குழு நியமிக்க வேண்டும்.

இந்த நிலையில், 2015-2018-ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 15-ம் தேதி புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வடபழனி சினிமா இசையமைப்பாளர் சங்கத்தில் நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கடந்த 5-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டார். வார நாட்களில் பெரும்பாலான சினிமா கலைஞர்கள் பிஸியாக இருப்பார்கள், படப்பிடிப்புக் காக வெளியூரும் செல்வார்கள்.

பொதுவாக சினிமா தொடர்பான சங்கங்கள் அதற்கான தேர்தலை ஒட்டுமொத்த திரைப்படத் தொழிலுக்கும் கட்டாய விடுமுறை நாளான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடத்தும். மேலும் வடபழனி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், வார நாட்களில் தேர்தல் நடத்தினால் மூத்த திரைப்படக் கலைஞர்கள் தேர்தலில் வாக்களிக்க வருவதற்கு பெரிதும் சிரமப்படுவார்கள். இதனால், தேர்தல் தேதியை மாற்றக் கோரி கடந்த 4-ம் தேதி சங்கத்தில் கடிதம் கொடுத்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலில் தேவைப்பட்டால் பிரசாரம் செய்யவும், தகுதியுள்ள வாக்காளர்களை சரிபார்க்கவும் தங்களுக்கு சங்க உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் என்று சங்கத்தில் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டுக்கொண்டோம். அதற்கான கட்டணம் செலுத்த முன்வந்தும் பட்டியலைத் தரவில்லை.

இப்போது சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் தன்னிச்சையாக தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஜெ.செல்வராஜையும், உதவி தேர்தல் அதிகாரியாக ஜேம்ஸ் அமுதனையும் நியமித்துள்ளனர். அதனால் இத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு தேர்தல் நடத்தினால்தான் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று சங்க உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

எனவே, இத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். தேர்தல் நடத்து வதற்கான அறிவிக்கை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள் ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் மனுவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE