ஜூன் 12 முதல் தமிழ்ப் படங்கள் வெளியாகாது: கியூப், யூ.எப்.ஓ. நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கியூப் மற்றும் யூ.எப்.ஓ டிஜிட்டல் நிறுவனங்களை கண்டித்து திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நேரில் வழங்கினார்கள்.

அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து க்யூஒ, யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் முறைகேடாக கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

* திரையரங்குகளில் விளம்பரங்கள் மூலம் வரும் சுமார் 400 கோடி ரூபாயில் தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* இது நாள் வரை திரைப்படங்கள் திரையிட்ட வகையில், தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

* தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் மட்டுமே ட்ரெய்லர்களை திரையிட வேண்டும், அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

* வசூல் செய்த சேவை வரியினை அரசிற்கு கட்டியதற்கான ஆதாரத்தை உடனே வழங்க வேண்டும்

* தயாரிப்பாளர்களின் திரைப்படத்திற்காகத்தான் விளம்பரம். எனவே, அந்தத் திரைப்படத்தின் நடுவில் காட்டப்படும், விளம்பரத்தில் வசூலிக்கும் தொகையில் ஒரு பங்கினை தயாரிப்பாளர்களுக்கு அளித்திட வேண்டும்.

* குறைந்த பட்ச குறிப்பிட காட்சிகளை திரையிட வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்.

* தமிழ்த் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யும்போது, அந்த ஒப்பந்தமானது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எளிமையான தமிழில் போடப்பட்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்

* முன்பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

* மே 29ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் வருகிற ஜூன் 12ம் தேதி முதல் எந்த திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்று கூட்டமைப்பின் சார்ப்பாக தீர்மானிக்கப்பட்டது.

* தனியார் கேபிள் டி.வி.களை தமிழக அரசே ஏற்று நடத்தியது போ, கியூப், யூ.எப்.ஓ போன்ற திரையுலக விரோத நிறுவனங்களை தாய் உள்ளத்தோடு தமிழக அரசை வழிநடத்தும் ஜெயலலிதா ஆசியோடு தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ்த் திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE