க்யூப் உரிமம்: தினசரி சிக்கலில் உத்தம வில்லன்

By ஸ்கிரீனன்

'உத்தம வில்லன்' படத்தின் மூலமாக ஏற்பட்ட கடன் பிரச்சினை இன்னும் தீராததால் தினசரி அடிப்படையில் காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ராஜ்கமல் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

திட்டமிட்டபடி 'உத்தம வில்லன்' மே 1ம் தேதி வெளியாகவில்லை. இறுதி நேரத்தில் பைனான்சியர்கள் கொடுத்த நெருக்கடியால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. அப்பிரச்சினைகளை தீர்த்து வைத்து மே 2ம் தேதி மதிய காட்சிகள் முதலே படம் வெளியானது.

இந்நிலையில், தற்போது தினசரி அடிப்படையில் க்யூப்-க்கிற்கான உரிமம் வாங்கப்பட்டு வருகிறது. இன்றைய காட்சிகளுக்கான உரிமம் வராததால், காட்சிகள் ரத்தாகும் சூழ்நிலை உருவானது.

இது குறித்து விசாரித்த போது, வழக்கமாக வெள்ளிக்கிழமை - வியாழக்கிழமை வரை உரிமம் வாங்கப்பட்டு திரையிடப்படும். ஆனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்குத் தான் க்யூப்-க்கிற்கான உரிமம் வாங்கப்பட்டு 'உத்தம வில்லன்' வெளியானது. அதனைத் தொடர்ந்து தினசரி அடிப்படையில் உரிமம் வாங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, இன்னும் திருப்பதி பிரதர்ஸ் - ஈராஸ் நிறுவனத்துக்கான பணப் பரிவர்த்தனைகள் இன்னும் முடிவடையவில்லை. ஈராஸ் நிறுவனத்திடம் காசு கொடுத்து தினசரி அடிப்படையில் தான் உரிமம் பெற்று திரையிடப்பட்டு வருகிறது 'உத்தம வில்லன்'.

"இன்று காலை காட்சிகள் ரத்தாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் உரிமம் கிடைத்தது. அந்த உரிமமும் ஒரு நாள் மட்டுமே செல்லும். தினசரி அடிப்படையில் 'உத்தம வில்லன்' திரையிடப்பட்டு வருவது கஷ்டமாக இருக்கிறது" என்று திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE