நீடிக்கும் உத்தம வில்லன் பிரச்சினை: தொலைக்காட்சி உரிமத்தில் சிக்கல்

கடன் பிரச்சினையால் தற்போது வரை 'உத்தம வில்லன்' பிரச்சினை நீடித்து வருகிறது. இப்போது தொலைக்காட்சி உரிமத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் 'உத்தம வில்லன்'. ராஜ்கமல் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டது.

கடன் பிரச்சினையால் 'உத்தம வில்லன்' திட்டமிட்டபடி வெளியாகவில்லை. மேலும், படம் மக்களிடையே தோல்வியை தழுவியது. தற்போது இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, "ஜெமினி லேப்பில் படத்தின் பணிகள் நடைபெற்றால், அங்கு கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துமே முடிந்தவுடன் படத்தை வெளியிடும் சான்றிதழ் கொடுப்பது வழக்கம். 'உத்தம வில்லன்' வெளியிடும் போது கடன் பிரச்சினைகள் தீராததால், தடையில்லா சான்றிதழ் கொடுக்கவில்லை.

இந்நிலையில், இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது முன்னணி தொலைக்காட்சி நிறுவனம். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தின் ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டாலும், ஜெமினி லேப்பில் படத்தை ஒளிபரப்புவதற்கான தடையில்லா சான்றிதழ் பெறவில்லை.

படத்தையும் பெரும் விலை கொடுத்து வாங்கிவிட்டும் இன்னும் ஒளிபரப்பு சான்றிதழ் வராததால் கடும் கோபத்தில் இருக்கிறது தொலைக்காட்சி நிறுவனம்

இதற்கிடையில், முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் கொடுத்த பெரும் விலைக்கான ஒப்பந்த பத்திரத்தை வைத்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் வாங்கியிருக்கிறது. அந்த கடனைக் கொடுத்தால் மட்டுமே ஜெமினி லேப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுக்க முடியும். அதற்குப் பிறகே முன்னணி தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பப்படும்" என்றார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE