ரஜினி படங்களுக்கு ரெட்?- விநியோகஸ்தர்கள் புது வியூகம்

'லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர். இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள்.

அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். அப்பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

ஆனால், 'லிங்கா' பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 'லிங்கா' பிரச்சினையை விநியோகஸ்தர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இம்முறை ரஜினி தலையீட்டு பணம் பரிவர்த்தனை பிரச்சினைகள் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறார்கள்.

மேலும், 'லிங்கா' பிரச்சினை முடியும்வரை ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என இரண்டு தரப்பும் ரெட் கார்டு போட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள் தரப்பினர் இன்று மாலை 3 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்து, இதுவரை என்ன நடந்தது, என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை ஆடியோவாகவும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் மீண்டும் 'லிங்கா' பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

'ரெட்' என்றால் என்ன?

தமிழ் திரையுலகில் 'ரெட்' என்பது தடை போல தான் கருதப்படுகிறது. ஒருவேளை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ரஜினி படங்களுக்கு 'ரெட்' போட்டுவிட்டார்கள் என்றால், 'ரெட்' நீங்கும் வரை எந்த ஒரு ரஜினி சம்பந்தப்பட்ட படத்தை யாருமே வாங்க மாட்டார்கள், திரையிடவும் மாட்டார்கள்.

திரையுலகில் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான 'உழைப்பாளி' படத்தின் பிரச்சினைக்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் ரெட் போடப்பட்டது. அப்போது ரஜினி, "நீங்கள் ரெட் போட்டால் எனக்கு கவலையில்லை. உங்களுடைய உதவி இல்லாமல் நான் திரையரங்குகளில் நேரடியாக வெளியிடுவேன்" என்று அதிரடியாக கூற, விநியோகஸ்தர்கள் இறங்கிவந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி ரெட் விலக்கப்பட்டது.

'லிங்கா' பிரச்சினையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஆகையால் ரஜினி இம்முறை 'உழைப்பாளி' பாணியில் அறிவிக்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE