கணவர் ஒத்துழைப்பு இருந்தால் எல்லா பெண்களும் ஜெயிக்கலாம்: ஜோதிகா

கணவர் ஒத்துழைப்பு இருந்தால் எல்லா பெண்களும் ஜெயிக்கலாம் என்று '36 வயதினிலே' பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா தெரிவித்தார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஜோதிகா, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்த'36 வயதினிலே' சமீபத்தில் வெளியானது. படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜோதிகா, சூர்யா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.

இச்சந்திப்பில் ஜோதிகா பேசியது, "'36 வயதினிலே' தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இன்னும் இப்படத்தை மஞ்சு வாரியர் பார்க்கவில்லை. கடந்த வாரம் இருவரும் பேசினோம். அவருடைய கருத்தை அறிய காத்திருக்கிறேன். நாட்டில் பிரதமர், ஜனாதிபதி ஆகிய உயரிய பதவிகளை பெண்கள் அடைய கணவரின் ஒத்துழைப்பு தேவை.

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று கணவர் ஆசைப்படுவது போலவே, மனைவியின் ஆசை என்ன என்பதையும் கணவர் தெரிந்து கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கணவரின் ஒத்துழைப்பு இருந்தால் எல்லா பெண்களும் ஜெயிக்கலாம்" என்றார்

இச்சந்திப்பில் சூர்யா பேசியது, "'36 வயதினிலே' பார்த்துவிட்டு அப்பா சிவகுமார் உன்னை விட ஜோதிகா நன்றாக நடித்திருக்கிறார் என்றார். நானும் அதே தான் சொல்கிறேன் என்றேன். ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பார்.

நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கான ஒருவரிக் கதையை ஒரு இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அவர் முழுக்கதையையும் தயார் பண்ண 10 மாதங்கள் ஆகும். அக்கதை தயார் ஆன பிறகு முடிவு செய்வோம்.

ஒரு திரையரங்கு உரிமையாளர் காமெடியாக "ரொம்ப நாள் கழித்து திரையரங்கு முழுவதும் மல்லிகைப் பூ வாசனை அடிக்கிறது" என்றார். அவ்வளவு பெண்கள் இப்படத்தை பார்க்க வந்து, எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி" என்றார்.

இச்சந்திப்பில் சூர்யாவின் 'அகரம் பவுண்டேஷன்' சார்பில் 25 நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இதுவரை குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு உள்ளிட்ட விஷயங்களை மட்டுமே கவனித்து வந்த அகரம் பவுண்டேஷன், இனிமேல் பெண்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE