உத்தம வில்லன் ரிலீஸாக காரணம் ஞானவேல்ராஜா: லிங்குசாமி நன்றி

'உத்தம வில்லன்' படம் வெளியாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் லிங்குசாமி நன்றி தெரிவித்தார்.

கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ராஜ்கமல் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

திட்டமிட்டபடி 'உத்தம வில்லன்' மே 1ம் தேதி வெளியாகவில்லை. இறுதி நேரத்தில் பைனான்சியர்கள் கொடுத்த நெருக்கடியால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்ட திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டாததால் மே 1ம் தேதி படம் வெளியாகவில்லை. மே 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு திரையரங்குகளில் காலை காட்சியை ரத்து செய்தார்கள். இதனால் மே 2ம் தேதியாவது வெளியாகுமா என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஈராஸ் அலுவலகத்தில் இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, சி.வி.குமார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பைனான்சியர் அன்பு உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.

அச்சந்திப்பில் சரத்குமார் பேசியது, "'உத்தம வில்லன்' படத்திற்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. 'கொம்பன்' படத்திற்கு பிறகு திரையுலகினர் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை பேசி தீர்த்திருக்கிறோம். இப்படம் வெளியாகமால் இருந்ததுக்கு எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இல்லை." என்று தெரிவித்தார்.

இயக்குநர் லிங்குசாமி பேசியது, "ஒரு ரசிகனாக நான் கமல் படம் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சி சென்றுவிடுவேன். அவ்வாறு இப்படத்தை வெளியிடாமல் போனதுக்கு மன்னிப்பு கோருகிறேன். வெளிநாடுகளில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு கொடுத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மதிய காட்சிகளில் இருந்து இப்படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, இப்படம் வெளியாக எனக்கு உதவி புரிந்த ஞானவேல்ராஜாவுக்கு நான் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய உதவியை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது." என்றார்.

'உத்தம வில்லன்' படத்துக்கான பிரச்சினை தீர்க்க தொடர்ச்சியாக 27 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. வேறு எந்த ஒரு படத்துக்கும் இவ்வளவு நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE