அசுத்தமாக இருந்த இடத்தை சுத்தம் செய்து பராமரிப்பதற்கு எதிர்ப்பு: நடிகர் விவேக் புகார்

அசுத்தமாக இருந்த இடத்தை சுத்தம் செய்து பராமரிப்பதற்கு குடியிருப்பு வாசிகளின் ஒத்துழைப்பு இல்லை என்று நடிகர் விவேக் ஆதங்கமாக தெரிவித்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’ விடம் விவேக் கூறியதாவது :-

சென்னை, சாலிகிராமம், லோகையா காலனியில் எனக்கு சொந்தமாக ஒரு கிரவுண்டுக்கு மேல் இடம் உள்ளது. என் இடத்துக்கு முன் குப்பைகளைக் கொட்டிவைக்கிறார்கள். அதைச் சுத்தம் செய்யலாம் என்ற நோக்கத்தில் அங்கு பூச்செடிகளை வைத்து, ‘குப்பை கொட்டாதீர்கள்’ என்று போர்டு எழுதி வைத்தேன். இது பிடிக்காத சிலர் அந்த போர்டையும், பூச்செடிகளையும் இரவில் சேதப்படுத்திவிட்டனர்.

அந்த இடத்தை நான் சுத்தமாக வைத்திருப்பது அங்குள்ள குடியிருப்பு நலச் சங்கத்துக்கும் பிடிக்கவில்லை. நான் இதுவரை 26 லட்சம் மரக்கன்றுகளுக்கும் மேல் நட்டுள்ளேன். ஆனால், என் சொந்த இடத்தை என்னால் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. இதுபற்றி மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்பு நலச் சங்கத்தின் செயலாளர் பேனர்ஜியிடம் கேட்டபோது, “நடிகர் விவேக் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வேலிகளை அமைத்து பூச்செடிகள் வளர்த்து வந்தார். இதனால் காலனிக்குள் மாநகராட்சி குப்பை அள்ளும் லாரிகளும், மெட்ரோ வாட்டர் லாரிகளும் வரமுடியவில்லை. இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதை யாரும் தடுக்கப்போவதில்லை. அவருடைய நிலத்தின் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே மாநகராட்சிக்கு சொந்தமான 60 அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பூச்செடிகள் வளர்ப்பது சரியில்லை. குறிப்பாக பூச்செடிகள் வைத்துள்ள இடத்திற்கு கீழே தெரு விளக்குக்கான கேபிள் புதைக்கப்பட்டிருக்கிறது. பூச்செடிகளின் வேர்களால் தெரு விளக்குகளின் கேபிள்கள் சேதமடையும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE