முத்துப்பேட்டை தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் வழிபாடு

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக் தாவூது ஆண்டவர் தர்காவுக்கு நேற்று காலை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் வந்தார்.

அவரை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி, அறங்காவலர்கள் தமீம் அன்சாரி, ஜெக்கரியா, சித்திக் அகம்மது, நூர் முகம்மது ஆகியோர் வரவேற்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான், தர்காவில் உள்ள சேக் தாவூது ஆண்டவர் சமாதி எதிரே அமர்ந்து நீண்டநேரம் தனது மகனுடன் ஜியாரத் மற்றும் பிரார்த்தனை செய்தார். அருகில் உள்ள ஆற்றாங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா ஆகியவற்றுக்கும் சென்று அவர் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் தர்கா அறங்காவலர் ஜெக்கரியா இல்லத்துக்குச் சென்ற அவர், மீண்டும் தர்கா முன்பு நின்று பிரார்த்தனை செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

“1992-ல், ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் இசை அமைத்த ரோஜா படத்தின் பாடல் கேசட் வெளியானபோது, முத்துப்பேட்டை தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்த ரஹ்மான், பின்னர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆனார். இதனால், அவர் இசை யமைத்த படங்கள் வெளியாகும் போதெல்லாம் குடும்பத்தினருடன் முத்துப்பேட்டை தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்” என்றார் முத்துப்பேட்டை தர்காவைச் சேர்ந்த முதியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE