உத்தம வில்லன் படத்துக்கு தடை கோரி வி.எச்.பி. மனு

By செய்திப்பிரிவு

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவுள்ள 'உத்தம வில்லன்' திரைப்படத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பு தடை கோரி போலீஸிடம் மனு அளித்துள்ளனர்.

இந்து மத உணர்வுகளை 'உத்தம வில்லன்' திரைப்படம் புண்படுத்துவதாக அந்த அமைப்பு புகார் கூறியுள்ளது.

வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒருங்கிணைப்பாளர் கே.எல்.சத்யமூர்த்தி தலைமையில், சென்னையிலுள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், திங்கள்கிழமை புகார் பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய வி.எச்.பி அமைப்பினர், 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரணியன் நாடகம் பாடலின் வரிகள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், இதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் வி.எச்.பி அறிவித்துள்ளது.

லிங்குசாமியுடன் கமல்ஹாசன் தயாரித்து, திரைக்கதை எழுதியுள்ள 'உத்தம வில்லன்' திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதம் கடைசி வாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE