படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களிடம் 10 சதவீதம் டெபாசிட் தொகை வசூலிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவார் கேயார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது:

"ஜனநாயக நாட்டில் வழக்குப் போடும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆனால், அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. மணிசூட் என்கிற பணம் தொடர்பான வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட தொகையை கோர்ட்டில் டெபாசிட் செய்துவிட்டுத் தான் வழக்குத் தொடர முடியும்.

அதுபோல ஒரு திரைப்படத்திற்கு எதிராக வழக்குத்தொடர வேண்டுமானால், அந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 10 சதவீதத்தையாவது கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் எந்தச் செலவும் இல்லாமல் விளம்பரம் தேடிக்கொள்பவர்களும், படைப்புச் சுதந்திரத்தை ஒடுக்க நினைப்பவர்களும் யோசித்து செயல்படுவார்கள்.

எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆகியோர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடைகேட்டு பிரச்சினை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும். நீதிமன்றங்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், தயாரிப்பாளர்கள் அச்சமின்றி தொழில் செய்யவும் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அவர்காள் குறிப்பிடவாறு அந்தப்படத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இல்லை என்கிற நிலையில் வழக்குப் போட்டவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிப்பதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் திரையுலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என்று அந்த் அறிக்கையில் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE