கிருஷ்ணசாமி மீது வழக்கு: கொம்பன் தயாரிப்பாளர் முடிவு

By ஸ்கிரீனன்

கிருஷ்ணசாமி மீது மானநஷ்ட வழக்கு தொடர, 'கொம்பன்' தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முடிவு செய்திருக்கிறார்.

கார்த்தி, லட்சுமி மேனன் நடிக்க முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'கொம்பன்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து, வெளியிட்டது. ஏப்ரல் 1ம் தேதி மாலை வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இப்படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்ததால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். பல எதிர்ப்புகளை மீறி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.

அச்சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது, "இப்படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி சார் வெறும் அம்பு தான். அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அதற்கான வழிமுறைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அவருடைய எதிர்ப்பால் சுமார் 120 திரையரங்குகள் குறைவாகத் தான் வெளியானது. வரும் புதன்கிழமை முதல் திரையரங்குகளை அதிகரிக்க இருக்கிறோம். அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமி சாரின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கு சரியான நேரத்தில் எங்களால் படத்தை அனுப்பமுடியவில்லை.

படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த பணத்தையும் ஒப்பந்தப்படி கழித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE