இந்து, முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு: ‘உத்தமவில்லன்’ இயக்குநர் ரமேஷ் அரவிந்த் விளக்கம்

எந்த தரப்பினரின் மனதையோ, உணர்வுகளையோ புண்படுத்தும் காட்சிகள் ‘உத்தமவில்லன்’ படத்தில் இல்லை என்று படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ திரைப்படம் மே 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் பாடல் காட்சி மத உணர்வை புண்படுத்தும் வகையில் எடுக்கப் பட்டிருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எம்.நஸீர் அகமது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார். ‘‘விஸ்வரூபம் படம் மூலம், முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்திய கமல்ஹாசன், தற்போது இந்து சமூக மக்களின் மனம் புண்படும் வகையில் ‘உத்தம வில்லன்’ படத்தை எடுத்துள்ளார். மதங்களை இழிவுபடுத்தி, சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறும்போது, ‘‘யாரு டைய மனதையும், உணர்வு களையும் புண்படுத்தும்படியாக ‘உத்தமவில்லன்’ படத்தில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும், தற்கால கலைஞருக்கும் இடையேயான வாழ்க்கைப் பதிவு சார்ந்த படம். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE