என் வளர்ச்சியை பணமாக்க பார்க்கிறார்கள்: சிம்ஹா கவலை

என்னுடைய வளர்ச்சியை வைத்து சிலர் பணம் பார்க்க நினைக்கிறார்கள் என்று நடிகர் சிம்ஹா கவலை தெரிவித்துள்ளார்.

பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார் மருதுபாண்டியன்.

"'ஜிகர்தண்டா' வெற்றிக்குப் பிறகு சிம்ஹா மாறிவிட்டார். படத்தில் லாபத்தில் பங்கு கேட்கிறார். வசூலில் பாதியை எனக்குத் தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிறார்" என சிம்ஹா மீது இயக்குநர் மருதுபாண்டியன் புகார்களை அடுக்கினார்.

இது குறித்து சிம்ஹாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பங்கு என்கிறார்கள், 60 லட்ச ரூபாய் என்கிறார்கள்... எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்படத்தில் நடித்து 5 வருடங்கள் ஆகிறது. நான் தானே நடித்தேன், என்னை டப்பிங் கூப்பிட வேண்டுமா இல்லையா. நான் வளர்ந்து விட்டேன் என்றவுடன் அதை காசாக்கப் பார்க்கிறார்கள்.

அப்படத்தில் நாயகியாக ஒருவர் நடித்திருக்கிறார். அவர் ஏன் வரவில்லை என்று கேளுங்கள். அந்தப் பெண்ணையும் குறும்படம் என்று அழைத்து ஏமாற்றிவிட்டார்கள். அந்த பெண் 2 வருடமாக போன் செய்தார், ஒரு வருடமாக நான் போன் செய்கிறேன். போனை எடுத்து பேச வேண்டுமா இல்லையா. அவர்கள் என்னுடைய வளர்ச்சியை வைத்து பணம் பண்ணுகிறார்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் போன் செய்து, "என்ன மச்சான், உன் படத்தின் இசை வெளியீடு போல" என்கிறான். அதைகூட என்னிடம் சொல்லவில்லை. ஷேர் என்கிறார், 60 லட்சம் என்கிறார் அல்லவா என் முன்னால் வந்து உட்கார்ந்து பேச சொல்லுங்கள். நான் பேச தயாராக இருக்கிறேன்.

படம் நடிப்பது என் வேலை அதை பண்ணிவிட்டேன். நான் நடித்த படத்துக்கு எனக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசி இருக்கிறார். அது எவ்வளவு அசிங்கம் சொல்லுங்கள்" என்கிறார் சிம்ஹா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE