மனசுக்குப் பிடிக்கணும்.. மனசுல நிக்கணும்..!- கார்த்திகா சிறப்பு பேட்டி

‘‘சிந்து என்ற கதாபாத்திரத்தில் ‘வா’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் சண்டைக் காட்சிகள் கிடையாது. ‘தில்’லான ரோல்கள் தான் இதுவரை பண்ணியிருக்கிறேன். முழுக்க முழுக்க ‘தமிழ் சினிமா’ நாயகியாக இந்த படத்தில்தான் நடித்திருக்கிறேன். நாயகிக்கான அறிமுகப் பாடல் போல அனைத்து அம்சங்களும் இருக்கிற மாதிரி ஒரு படத்தில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்படத்தில் நிறைவேறி இருக்கிறது’’ - குதூகலமாக சிரிக்கிறார் கார்த்திகா.

கே.வி.ஆனந்த், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குநர்களிடம் பணியாற்றிவிட்டு, புதுமுக இயக்குநரிடம் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

ஒரு புதிய இயக்குநர் எவ்வளவு நல்ல கதை சொன்னாலும், படமாக எந்த அளவுக்கு எடுப்பார் என்ற சந்தேகம் இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ரத்தினம் சிவா, கதை சொல்லும்போதே என் பாத்திரம் பற்றி ஊகிக்க முடிந்தது. அதுமட்டுமன்றி, சிறு நடிகர்கள், சின்ன கேமரா வைத்து ஷூட் பண்ணிவைத்திருந்த மினி டிரெய்லரை காட்டினார். நம்பிக்கையாக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

முதல் நாள் முதல் காட்சி படப்பிடிப்பின்போது ஏதோ அதிர்ச்சி கொடுத்தீர்களாமே..

இப்படத்தில் பல காட்சிகள் காரில்தான் இருக்கும். முதல் நாள், முதல் காட்சியும் காருடன்தான் தொடங்கியது. நான் ஓட்டுவதுபோன்ற காட்சி. எல்லாம் தயாராகி இயக்குநர் ‘ஆக்ஷன்’ சொன்னதும், வாய் தவறி ‘பிரேக் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டுவிட்டேன். எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி. பக்கத்தில் இருந்த அருண் விஜய் ரிஸ்க் எடுத்துதான் உட்கார்ந்திருந்தார். ‘பயப்படாதீங்க. எங்கிட்ட லைசன்ஸ் இருக்கு’ என்றேன். தவறிக்கூட, ‘டிரைவிங் தெரியும்’ என்று சொல்லவில்லை.

பெரிய நாயகியான ராதாவின் மகள் நீங்கள். உங்கள் படப்பிடிப்புக்கு அவர் வருவதில்லையே?

‘நடிகைகளின் மகள் என்றாலே படப்பிடிப்புக்கு அம்மாவும் வருவார். இந்தக் காட்சி ஏன் எடுக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்’ என்பார்கள். இப்படி யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதால்தான் அம்மா வருவதில்லை. இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை பார்க்கலாம் என்பதால் முதல் நாள் படப்பிடிப்புக்கு மட்டும் வருவார். அப்போதுகூட, படப்பிடிப்பு தளத்துக்கு வரமாட்டார். கேரவேனிலேயே இருப்பார்.

‘கோ’ படம் பெரிய ஹிட். அதற்கு பிறகு உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே.

‘கோ’ படத்துக்குப் பிறகு, தெலுங்கில் அடுத்தடுத்து பண்ணினேன். அம்மாவுக்கு முதல் படம் தமிழில்தான் அமைந்தது. எனக்கும் முதல் படம் தமிழில் பண்ணவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், அதெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை. 10-ம் வகுப்பு முடித்ததும், அப்படியே நடிக்க வந்துவிட்டேன். தெலுங்கில் நாகார்ஜுன் மகனுடன் நடித்தேன். அவர் நடிப்பு, நடனம் எல்லாம் படித்துவிட்டு வந்தவர். நான் எதுவுமே தெரியாமல் போய் நின்றேன்.

தமிழில் இடைவெளி இருக்கலாம், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தேன். எல்லா படத்திலும் முக்கிய வேடம் என்பதால் அதிக தேதிகள் ஒதுக்கவேண்டி இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும், மனசுக்கு பிடிக்கணும். மக்கள் மனசுல நிற்கணும். அதுபோதும்.

‘அன்னக்கொடி’ படத்தில் நடித்ததற்கு வருத்தப்பட்டீர் களாமே?

யார் சொன்னது. அதில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ‘கோ’ பார்த்த பிறகு பாரதிராஜா சார் கொடுத்த வாய்ப்பு அது. ‘கோ’ பார்த்தவர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் அது. நடிப்புக்கு நான் பயிற்சி எடுக்கவில்லை என்ற குறை அந்த படத்தின் படப்பிடிப்பில் தீர்ந்துவிட்டது. உதயசந்திரிகாவை ‘ராதா’வாக ஆக்கிய குருநாதர் பாரதிராஜா சார். அவரது படத்தில் நடித்தது என் பாக்கியம்.

அம்மா ராதா நிறைய படங்களில் நடித்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தவர். அதுபோன்ற ஆசை உங்களுக்கு இல்லையா?

சூப்பர் நாயகன் முதல் காமெடியன் நாயகன் வரை அத்தனை பேருடன் நாயகியாக நடித்தார் அம்மா. யாருடன் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட காலம் அது. அதனால், ரொம்ப எளிதாக 200 படங்கள் வரை பண்ணிவிட்டார்கள். தவிர, அப்போதெல்லாம் 2 மாதத்தில் மூன்று நான்கு படம் முடித்துவிடுவார்கள். இப்போது ஒரு படம் முடிக்க ஒரு வருடம் ஆகிறது. அம்மா நடித்த 200 படங்களுக்கு நான் நடிக்கும் 2 படங்கள் சமம்னு நினைக்கிறேன்.

முன்னணி நடிகர்களுடன் கார்த்திகாவை எப்போது நாயகியாக பார்ப்பது?

ஜீவா, அருண்விஜய் முன்னணி நடிகர்கள்தானே. நீங்கள் சொல்லும் முன்னணி நடிகர்கள் எல்லாம் 4 ஆண்டுகளுக்கு படங்கள் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார்கள். கார்த்திகா இந்த வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யாராவது விரும்பினால், அம்மாவை தொடர்பு கொள்வார்கள். மற்றபடி, பிஆர்ஓ, மேனேஜர் என்று யாரையும் நான் வைத்துக்கொள்வதில்லை. நான் நடித்த படங்கள் எல்லாமே தானாக தேடிவந்தவைதான். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை. நான் ஒரு நடிகை என்று விளம்பரப்படுத்திக் கொள்வதும் இல்லை. நமக்கு ஏற்ற பாத்திரம் என்றால், எங்கிருந்தாலும் தேடிவந்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE