‘வேலையை உதறிவிட்டு நடிக்க வந்தேன்’: ஷிவதா பேட்டி

By மகராசன் மோகன்

சுள்ளென்று சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே இரண்டு, மூன்று நாட்கள் ஆசீர்வதித்துச் சென்ற மழைபோல குளுமையாக பேசுகிறார், ‘நெடுஞ்சாலை’ நாயகி ஷிவதா. தினசரி காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி வரைக்கும் நடனப் பயிற்சி, மீதமிருக்கும் நேரமெல்லாம் தன் அக்காவின் 8 மாதக் குழந்தையோடு விளையாட்டு என்று இனிமையாக நேரத்தை செலவழிக்கும் அவரை ’தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

இன்ஜினீயரிங் மாணவியான உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?

எல்லோரையும் போல நானும் படிப்பே பிரதானம் என்றுதான் இன்ஜினீயரிங் கல்லூரிக்குள் நுழைந்தேன். படிப்பின் நடுவே கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. அது அப்படியே படர்ந்து கல்லூரிக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தேன். அப்படி ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக இயக்குநர் பாசில் என்னைப் பார்க்க நேர்ந்தது. அவருக்கு என்னை பிடித்துப் போனதால் தனது ‘லிவிங் டுகெதர்’ படத்தில் நாயகியாக்கினார். சினிமாவில் ‘கிரியேட்டிவிடி’ விஷயங்களுக்கு நிறைய வேலை இருப்பதை அந்த ஒரு படமே எனக்கு உணர்த்தியது. அதனாலேயே சினிமா மீது எனக்கு காதல் அதிகமானது. படிப்பு முடிந்ததும் ‘கேம்பஸ்’ நேர்காணலில் தேர்வாகி கிடைத்த வேலையைக்கூட தூக்கிப்போட்டுவிட்டு சினிமாவில் நுழைந்துவிட்டேன்.

படித்து முடித்ததும் கிடைத்த வேலையில் இருக்கும் வசதி, பேன்டஸி துறையான சினிமாவில் தொடர்ந்து இருக்குமா என்று என் வீட்டில் இருப்பவர்கள் முதலில் யோசித்தார்கள். பிறகு என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விரும்பாமல் என் இஷ்டத்துக்கு விட்டுவிட்டார்கள். அந்த சுதந்திரம் என்னை ரொம்பவே தெளிவாக திட்டமிட வைக்கிறது. ஷூட்டிங் தொடங்கி டப்பிங் முடியும் வரைக்கும் அம்மா கூடவே இருக்கிறார். அப்பா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷூட்டிங் வருவார். ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கே எனக்கென்று அவர்கள் இருப்பது சுகமாக இருக்கிறது.

தமிழில் ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது?

அந்தப் படத்தில் வரும் மங்கா கதாபாத்திரத்துக்கு நான் பொருத்த மாக இருப்பேன் என்று இயக்குநர் கிருஷ்ணா என்னைத் தேர்வு செய்தார். நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கும் என்பதால் நானும் ஒப்புக்கொண்டேன். துளி யும் மேக்கப் இல்லாமல் இப்படத் தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

தமிழ் சினிமா வாய்ப்புக்காகத்தான் சென்னையிலேயே தங்கி இருக்கிறீர்களா?

‘பெல்’ நிறுவனத்தில் சீனியர் டி.ஜி.எம். பொறுப்பில் உள்ள அப்பா வுக்கு இப்போது இங்கேதான் வேலை. அதனால் குடும்பத்தோடு சென்னையில் இருக்கிறோம். மற்றபடி சினிமாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிப்பட வாய்ப்புகளும் வருகிறது. தமிழில் என் இரண்டாவது படம் முதல் படத்திலிருந்து வித்தியாசமானதாக அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன். ஆனால் மீண்டும் ‘நெடுஞ்சாலை’ மாதிரியான கதாபாத்திரங்களே வருகிறது. அதனால் தவிர்த்து வருகிறேன். எனக்கு தெலுங்கு சரியாக பேசவராது. அதனால் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க வராது என்பதால் அங்கிருந்து வரும் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறேன். இப்போதைக்கு தமிழ்த்திரையில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். இங்கே சினிமாவுக்கான எதிர்பார்ப்பு, ஈர்ப்பு, உழைப்பு, அதுக்கு கிடைக்கும் பலன் எல்லாமே அதிகம். அதுதான் தமிழ் சினிமாவின் மீது எனக்கு தனியொரு காதலை ஏற்படுத்தியுள்ளது. ‘நாயகி ஷிவதா நடித்த கதாபாத்திரம் மாதிரி நானும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும்’ என்று மற்றொரு நடிகை சொல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை.

நிச்சயம் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்