கொம்பன் பிரச்சினை: கண்கலங்கிய ஞானவேல்ராஜா

'கொம்பன்' படத்தில் சாதிய ரீதியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் 'கொம்பன்' படத்தை இன்று பார்த்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன், கொம்பன் பட இயக்குநர் முத்தையா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாணு : '' 'கிழக்குச் சீமையிலே' படம் மாதிரி காவியமான படம் 'கொம்பன்'. இந்தப் படத்தில் எந்த சாதிய மோதலும் இல்லை. எந்த சூழலிலும் யாரையும் இழிவுபடுத்தவேண்டும் என்று எந்தக் காட்சியும், வசனமும் இல்லை. ஆனா, ஏன் இப்படிப்பட்ட இன்னலில் சிக்கி இருக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.'' என்று தாணு பேசினார்.

சரத்குமார்: ''படம் சென்சார் ஆனபிறகு தனிநபரோ, அமைப்போ தடை செய்வதற்கு உரிமை இருந்தால் சென்சார் என்பது எதற்காக இருக்கிறது.

மத்திய அரசின் தணிக்கைக் குழு மூலம் படம் சென்சார் ஆன பிறகு அந்தப் படத்தைப் பற்றி முடிவு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இனிவரும் காலங்களில் தனிநபரோ, அமைப்போ படத்துக்கு எதிராக இதுபோன்று ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்.

மாமனார், மருமகன், அம்மா, மனைவி என்று பாசமுள்ள சிறந்த கதையைப் படமாக சொல்லியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லப்படவில்லை. சாதிப் பிரச்சினையோ, சாதிக் கலவரமோ, தூண்டுகின்ற சம்பவமோ, வசனங்களோ இல்லை.

எல்லாத் துறைகளையும் சார்ந்தவர்கள், சிறப்பாக கணிக்கக்கூடியவர்கள் தான் தணிக்கைத் துறையில் இருக்கிறார்கள்.

பொறுப்பில்லாதவர்கள் திரைப்படங்களை எடுப்பது மாதிரியான சூழலை உருவாக்குவது தவறு என்பது எங்களின் ஒருமித்த கருத்து.'' என்று சரத்குமார் பேசினார்.

விக்கிரமன்: '' 'கொம்பன்' படத்தில் ஹீரோ எந்த சாதி என்பதைக் கூட படத்தில் சொல்லவில்லை. இரு சாதியினருக்கான மோதல் என்கிற பிரச்சினை கிடையவே கிடையாது. இந்தப் படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தவறாகத் தெரிகிறது.

இதில் சாதி மோதலைத் தூண்டுவதைப் போல இருக்கிறது என்று படம் பார்த்துவிட்டு யாராவது சொன்னால் நான் திரையுலகத்தை விட்டே போய்விடுகிறேன்.'' என்று விக்கிரமன் பேசினார்.

ஞானவேல்ராஜா: '' மார்ச் 27ம் தேதி 'கொம்பன்' ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபோது எந்த போராட்டமும், வழக்கும் இல்லை. ஆனால், 'கொம்பன்' படத்தின் வேலைகள் முடியாததால் ஏப்ரல் 2ல் ரிலீஸ் என்று திட்டமிட்டோம்.2ம் தேதி ரிலீஸ் என்றதும் அத்தனைப் பிரச்சினைகளும் பூதாகரம் ஆனது. ஏப்ரல் 10ம் தேதி படம் ரிலீஸ் என்றால் இந்தப் பிரச்சினையே எனக்கு இல்லை'' என்றார்.

பத்திரிகையாளார் சந்திப்பின்போது ஞானவேல்ராஜா உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்கலங்கினார்.

ஏப்ரல் 2 அன்று வெளியாக இருந்த 'கொம்பன்' திரைப்படம் ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE