தன் மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டது ஏன் என்பதற்கு 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டின் போது விளக்கம் அளித்தார் நாசர்.
கமல் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் கமல் உடன் நாசர் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது தான் நாசரின் மகனுக்கு விபத்து நேரிட்டது. எனினும் நாசர் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனால், நாசரின் மகனுக்கு விபத்து நேரிட்டபோது கூட கமல் விடாமல் படப்பிடிப்பு நடத்தினார் என்று செய்திகள் வெளியானது. இதற்கு நாசர் மறுப்பு தெரிவித்தார். அன்றைக்கு நடந்தது என்ன என்பதை இசை வெளியீட்டு விழாவின் மேடையில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
"ஈ.சி.ஆர் சாலையில் தான் 'உத்தம வில்லன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. அன்றைய தினம் அதே சாலையில் தான் எனது மகனுக்கும் விபத்து நேரிட்டது. விபத்து நேரிட்ட உடன் நான் எனது காரில் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றேன்.
எனது மகன் ஐ.சி.யூவில் இருந்ததால் பார்க்க முடியவில்லை. எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. உடனே கமலுக்கு போன் பண்ணி "சார்.. நான் நாளைக்கு படப்பிடிப்பிற்கு வருகிறேன்" என்றேன். "அதெல்லாம் வேண்டாம். நீங்கள் மகனைப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றவரிடம் "இல்லை சார்.. நான் வர்றேன்" என்றேன். ஒரு சிறு மெளனத்திற்குப் பிறகு "சரி வாங்க" என்றார்.
நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது, நாங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக போடப்பட்ட செட் எல்லாம் கலைக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் நான் போய் மேக்கப் போட்டேன். மேக்கப் போட 3 மணி நேரமாகும். அப்போது கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும். என் பையனும் இப்படித்தானே மருத்துவமனையில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். மேக்கப் போட்டு முடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து உட்கார்ந்து விட்டேன். அன்றைக்கு நான் போட்ட மேக்கப்பிற்கு காட்சியே இல்லை. ஆனாலும், என்னை வைத்து ஒரு காட்சியை எடுத்தார்கள். அது தான் கமல்.
மறுநாள் படப்பிடிப்பிற்கு போனேன். திரும்பவும் அதே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இருந்தது. சினிமாவில் மட்டும் தான் ஒரே நாள் இரவில் கோட்டையை அழிக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும். எனது மகனுக்கு விபத்து நேரிட்ட போது எனக்காக சில லட்சங்கள் இழந்து செட்டை போட்டு பிரிந்து என எனக்காக எல்லாமும் செய்தார் கமல்.
அதே போல, விபத்து நடந்த அன்று காரில் மருத்துவமனைக்கு போய் கொண்டிருக்கிறேன். அன்றைய தினம் என்ன காரணம் என்று தெரியவில்லை, ஈ.சி.ஆர் சாலையில் கடும் நெரிசலால் மெதுவாகத் தான் செல்ல முடிந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து, உங்க பையனை இப்போ இங்கே கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள், இப்போது இந்த டெஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது, இப்போ இது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது கூட "நாசர். எந்தொரு காரணத்தைக் கொண்டும் வாட்ஸ்-அப்பில் வரும் விபத்து புகைப்படத்தை நீங்களோ, உங்களது மனைவியோ பார்க்கக் கூடாது." என்றார். இன்று வரை நான் அதை பார்க்கவில்லை. அதற்கு காரணம் கமல்.
விபத்து நடந்த சமயத்தில் நான் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பிற்கு திரும்பாமல் இருந்திருந்தால் இன்று வரை நான் படங்களின் நடித்திருப்பேனா என்று தெரியவில்லை. இதுவரை நிறைய படங்களில் நடித்துவிட்டாலும், 'உத்தம வில்லன்' எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம்" என்று பேசினார் நாசர்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago