தமிழ் திரையுலகம் 3 மாதங்கள் முடக்கம்? - தயாரிப்பாளர் சங்கக் குழுவில் பரபரப்பு

தமிழ் திரையுலகை 3 மாதங்கள் முடக்க கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தாணு பொறுப்பேற்ற பிறகு அதன் பொதுக்குழு நேற்று முதல் முறையாக கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் பேசிய தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் “தற்போது ‘கியூப்’ தொழில்நுட்பத்துக்கு நிறைய பணம் செலவாகிறது. சென்சாரில் நீக்கச் சொன்ன காட்சியை கியூபில் நீக்கவேண்டுமென்றால் அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கிறார்கள்.

இதுபோன்ற பல்வேறு விஷயங்களால் படத்தை தயாரிப்பதற்கான செலவு அதிகமாகி வருகிறது” என்றார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிப்பதில் உள்ள சிரமங்களைப் பற்றி பேசினார்.

ஒரு கட்டத்தில் திரையுலகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் 6 மாதங்களுக்கு முடக்கிவைக்க வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மூன்று மாதங்களுக்காவது திரையுலகப் பணிகளை முடக்கிவைக்க வேண்டும் என்று இப்ராஹிம் ராவுத்தர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் “மூன்று மாதக் காலத்துக்கு திரையுலகம் முடக்கப்படும்” என்றார். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, இப்பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு விழா எடுப்பது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி களுக்கு படங்களின் உரிமைகளை வழங்குவது உள்ளிட்ட சில விஷயங்களோடு தனது உரையை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழ் திரையுலகை முடக்குவது குறித்த இறுதி முடிவை தயாரிப்பாளர் சங்க செயற்குழு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.

பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தயாரிப் பாளர் தாணுவைத் தொடர்புக் கொண்டு கேட்டபோது, “தமிழ் திரையுலகை முடக்குவது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் பேசித்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். தற்போது தமிழ் திரையுலகில் படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளர்கள் பணக்காரர் களாக இருக்கிறார்கள்.

படம் முடிவடையும் போது அவர்கள் ஒன்றுமே இல்லாத வர்களாக ஆகிவிடுகிறார்கள். சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் செலவுகள் கூடிவிட்டது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE