படத்தொகுப்பாளர் கிஷோருக்கு மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம் செய்ய ஏற்பாடு

'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் (36) மூளைச்சாவு அடைந்தார். இதை, மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.

மூளையில் ரத்த உறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடர்ந்து கோமா நிலையில் கவலைக்கிடமாக இருந்தார். இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர். அவர் தனது 21 வயதில் படத்தொகுப்பாளார்கள் பி.லெனின், வி.டி.விஜயனிடம் உதவியாளராக சேர்ந்தார். 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகம் ஆனார்.

'ஆடுகளம்', 'பயணம்', 'எங்கேயும் எப்போதும்', 'காஞ்சனா', 'பரதேசி', 'மதயானைக் கூட்டம்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் கிஷோர். இவர் படத்தொகுப்பில் இதுவரை 29 படங்கள் வெளிவந்துள்ளன. 'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்று கவனத்தை ஈர்த்தவர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து வந்தபோது கிஷோருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.

கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது என்று கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பவில்லை.

உடல் உறுப்புகள் தானம்:

கிஷோருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், கிஷோரின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கிஷோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்ட பின்பு, நாளை (சனிக்கிழமை) மதியம் ஒரு மணிக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக கிஷோரின் உடல் வைக்கப்பட உள்ளது.

சென்னை - வடபழனியில் உள்ள கிஷோரின் எடிட்டிங் ஸ்டுடியோவில் நான்கு மணி நேரம் கிஷோரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதற்குப் பிறகு கிஷோரின் உடல் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE