லதா ரஜினி நோட்டீஸ் எதிரொலி: வலுக்கிறது கோச்சடையான் பிரச்சினை

தன் மீது வீண் பழி சுமத்தியதாக ஆட் பியூரா நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆட் பியூரா நிறுவனம், லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புவதாகவும், அவருக்கெதிரான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த ஆட் பியூரா நிறுவனத்தினர், கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாத விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டினர்.

இது குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என்றும், வீண் பழி சுமத்தி தனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட் பியூராவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள லதா ரஜினிகாந்த, தனது பெயரை ஆட் பியூரா கெடுப்பதாகக் கூறியுள்ளார். மேலும், கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது. ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது.

தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்திரவாதத்தில் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் அந்தக் கடனை கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது.

இவ்வாறு லதா ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தொடர்புகொண்ட போது பேசிய ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார், ”லதா ரஜினிகாந்த் முதலில் என்னை தெரியவே தெரியாது எனக் கூறினார், ஆனால் தற்போது என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கெனவே அவர் கொடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளது. பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம். பணம் தரவில்லையென்றால் 31-ஆம் தேதிக்கு பின் நீதிமன்றம் செல்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் ஆடி பியூரா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை.

அதே போல படத்தின் தமிழ்நாடு உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு எங்களுக்குத் தெரியாமல் விற்கப்பட்டது. வாங்கிய ரூ.10 கோடியில், நவம்பர் 2014 வரை ரூ.4.7 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து இன்னும் ரூ.6.84 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது. பணத்தை திரும்பத் தராமல் லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார்.

முன்னதாக இது குறித்து லதா ரஜினிகாந்த் பெங்களூரு மற்றும் சென்னை என இரண்டு நீதிமன்றங்களிலும் தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன. கூடிய விரைவில் லதா ரஜினிகாந்த பொய் சொல்லிவருவது அனைவருக்கும் தெரியும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE