உத்தம வில்லன் ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு

ஏப்ரல் 10-ம் தேதி கமல் நடிப்பில் வெளியாகவிருந்த 'உத்தம வில்லன்' திரைப்படம் தற்போது வெளியீட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜாகுமார்,ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இசை வெளியீடு, இறுதிகட்டப் பணிகள் என அனைத்தும் முடிந்து ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில், ஏப்ரல் 10ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது.

'உத்தம வில்லன்' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனத்தினர் "உத்தம வில்லன் 10ம் தேதி வெளியாகவில்லை. வெளியீட்டு தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்சார் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 17 அல்லது ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE