வடிவேலுவை மிரட்டுவதா?- சீமான் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

‘தெனாலிராமன்' படம் தொடர்பாக நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவரை மிரட்டுபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றன.

அவருடைய வீட்டை முற்றுகையிடப் போவதாகவும், குறிப்பிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல், காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவ னுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்படவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக்காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராகக் கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனைப் புண்படுத்தும் செயல்.

பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது.

இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்குத் தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி தயங்காது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE