'லிங்கா' பட இழப்பீட்டில் 10% தொகையை தரத் தயார் என்ற தயாரிப்பாளர் அறிவிப்பு, விநியோகஸ்தர்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், 'மெகா பிச்சை' என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம் என்று 'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், '' 'லிங்கா' திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் 'லிங்கா' படத்தை வாங்கினோம். பட புரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்து, இந்தப் படத்தை வாங்க முடிவுசெய்தோம்.
ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம்.
அதன்பிறகு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.
10 சதவீத நஷ்ட ஈடு
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி தயாரிப்பாளர் 10 சதவீத நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
45கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட பணமில்லாத எங்களுக்கு வேறு வழி கொடுக்காமல் அடுத்தகட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர்.
பிச்சை எடுக்கும் போராட்டம்
இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து உண்மையை விளக்கி 'மெகா பிச்சை' என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.
இந்தப் போராட்டம் போயஸ்கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இனிமேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்த்தை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும்.
இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
'லிங்கா' படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி, அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago