தமிழ் சினிமாவில் நாயகர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக உருவான காலம் தொட்டே அவர்களுடைய ரசிகர்களின் மோதல்களும் தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், என்று தொடங்கிய ரசிகர்களின் ஆக்ரோஷ மோதல்கள் இன்று அஜீத் - விஜய் ரசிகர்களிடையே உச்சகட்டத்தை எட்டி நிற்கிறது. முந்தையை ரசிகர்கள் போஸ்டர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் மோதிக்கொண்டிருந்தனர். ஆனால் அஜீத் - விஜய் ரசிகர்கள் அந்த யுத்தத்தை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த பல காலமாக இந்த மோதல் இருந்துவந்தாலும் அது உச்சகட்டத்தை எட்டியது இந்தப் புத்தாண்டில்தான். பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டிய அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 29-ம் தேதிக்குத் தள்ளிப்போவதாக அதன் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் புத்தாண்டு சமயத்தில் அறிவித்தார். ஏற்கெனவே ‘கத்தி’ பட விவகாரத்தில் தங்களை கலாட்டா செய்த அஜீத் ரசிகர்களைப் பழிவாங்க, இதுதான் தக்க சமயம் என்று பொங்கி எழுந்தனர் விஜய் ரசிகர்கள்.
“அஜீத் எப்போதும் யாருடனும் போட்டியிடாமல் தனியாக தன் படத்தை வெளியிடும் பழக்கம் கொண்டவர்” என்று ஆரம்பித்து, “மோதி ஜெயிக்கிறதுதான் வீரம்... தனிச்சு நின்னா அதுக்குப் பேரு சோரம்” என்று அஜீத் ரசிகர்களை ட்விட்டர் தளத்தில் சீண்டிப் பார்த்தனர்.
இதனால் கொந்தளித்துப்போன அஜீத் ரசிகர்கள் பதிலுக்கு, “படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதற்காக கைகட்டி வாய்ப்பொத்திக் கெஞ்சியது நாங்களா?” என்று ‘தலைவா’ பட சர்ச்சையை நினைவூட்டினர்.
இந்த சண்டையை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் விஜய்க்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள் அஜீத் ரசிகர்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அஜீத்துக்கு எதிரான ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் பரப்பினார்கள். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வாய்கூசும்படியான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொண்டது தமிழக சினிமா ரசிகர்களின் தரத்தை இந்திய அளவில் குறைப்பதாக இருந்தது.
ரசிகர்களின் இந்த மோதலைப் பற்றி அஜீத்தும், விஜய்யும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியுள்ளனர். உதாரணமாக ஒருமுறை ‘மங்காத்தா’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய், அஜீத்துக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதுபோல் விஜய்யின் பிறந்தநாள் ஒன்றில் அவரது வீட்டுக்கு சென்று நாள் முழுவதும் அவருடன் இருந்துள்ளார் அஜீத்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடிய விஜய் “ரசிகர்களின் சண்டை தேவையற்றது. தங்களது குடும்பத்தைத்தான் அவர்கள் முதலாவதாக கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் இரு தரப்பு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் மோதிவருவது கவலைக்குரியதாக உள்ளது.
வலைத்தளத்தில் அஜீத் ரசிகராக இருக்கும் நஸ்ருதீனிடம் இதுபற்றி கேட்டபோது, “இந்த மோதல் ‘ஆரம்பம்’ படத்தின் முதல் பார்வை டீஸர் வந்தபோதுதான் முதலில் தொடங்கியது. அஜீத்தின் படத்தைப் பற்றி ட்விட்டரில் நாங்கள் ஏதாவது குறிப்பிட்டால் விஜய் ரசிகர்கள் உடனடியாக அதைக் கிண்டல் செய்து எதையாவது எழுதிவிடுகிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போன செய்தி வெளியான போது விஜய் ரசிகர்களின் கிண்டல் அதிகமாக இருந்தது. உடனடியாக நாங்கள் விஜய்க்கு எதிராக பதிவுகளை இடத் தொடங்கினோம். தற்போதைய இந்த மோதல் தவறான விஷயம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக எங்கள் ‘தல’யை விட்டுத்தர முடியாது. ட்விட்டரில் நாங்கள் ஒரு விஷயத்தைக் ட்ரெண்ட் செய்தால் அவர்களும், அவர்கள் ட்ரெண்ட் செய்தால் நாங்களும் அமைதிகாக்க வேண்டும். நாங்கள் அமைதிகாக்க தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்குத் தயாரா?” என்றார்.
விஜய் ரசிகரான தீபக் கூறும்போது, “இந்த சண்டை ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போனதில் இருந்துதான் ஆரம்பித்தது நாங்கள் அஜீத்தை கிண்டல் செய்து எந்தப் பதிவையும் இடவில்லை. அவரது ரசிகர்களைத்தான் கிண்டல் செய்தோம். அஜீத் ரசிகர்களும் அதற்குப் பதிலாக எங்களைக் கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதில் அவர்கள் எங்கள் தளபதியை கிண்டல் செய்தார்கள். அதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் ட்விட்டர் தளத்தில் சண்டை பெரிதானது. இது தவறுதான் என்றாலும், எங்களுக்கு எதிராக ஒரு விஷயம் நடைபெறும் போது, அதை கை கட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சண்டை நிற்கவேண்டும் என்றால் விஜய், அஜீத் இருவரும் இணைந்து அறிக்கை விட வேண்டும். அல்லது ஒரு வீடியோ பதிவை வெளியிட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும்” என்றார்.
‘தல’யும் ‘தளபதி’யும் இதைச் செய்வார்களா?
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago