காந்தப் படுக்கை போலவே லிங்கா மோசடி- விநியோகஸ்தர் புலம்பல் பேட்டி

By உதிரன்

‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நுர்வாகப் பங்குதாரர் சிங்காரவேலன், கேப்ரிகான் பிக்சர்சஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சாய், சந்திரகலா மூவிஸ் நிர்வாகப் பங்குதாரர் ரூபன், திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர்கள் சார்பில் ரவிகணேஷ் ஆகியோர் இன்று காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினர்.

மெரினா பிக்சர்ஸின் நிறுவன நிர்வாகப் பங்குதாரர் சிங்கார வேலன் பேசியதாவது:

'' ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விநியோகிக்கும் உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றிருந்தது. வழக்கமாக ரஜினி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் 7 கோடிக்கு வாங்கத் திட்டமிட்டனர்.

ஏனெனில், 'எந்திரன் ' திரைப்படத்துக்கு 7 கோடி என்று விநியோகஸ்தருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நாங்கள் இந்ததுறைக்கு புதிது என்பதால் வியாபார நலன் கருதி இன்னும் கொஞ்சம் கூடுதலாக பணக் கொடுத்து வாங்க திட்டமிட்டோம்.

10% கமிஷன் என ஒப்பந்தம்

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எங்களுக்கு 'லிங்கா' திரைப்படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கவில்லை. படம் 10 படையப்பா, 5 எந்திரனுக்கு சமம். நாங்கள் படம் பார்த்துவிட்டோம். தைரியமாக படம் வாங்கலாம் என்று சொன்னது. 'லிங்கா' படத்துக்கு 9 கோடி ரூபாய் என்று விலை சொன்னது. நாங்கள் 8 கோடிக்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கினோம். அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தின் வசூலில் 8 கோடி எடுத்துக்கொண்ட பிறகு, மொத்த வசூலையும் அவர்களிடமே கொடுக்க வேண்டும். அதில் 10% கமிஷன் மட்டும் தருவதாக சொல்லப்பட்டது. அதற்கும் நாங்கள் சம்மதம் சொன்னோம்.

ரூ.5.40 கோடி இழப்பு

படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. 55 தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட்டோம். அதில் மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் படம் பார்க்கமுடியும். ஆனால், 75 ஆயிரம் பேர்தான் படம் பார்த்தனர். இதனால் முதல் நாள் வசூல் 95 லட்சம் கிடைத்தது. அதற்கடுத்து, 55 லட்சம், 65 லட்சம் என வசூல் ஆகி கடைசியில் 86 ஆயிரம் மட்டுமே வசூல் ஆனது. நேற்றைய வசூல் நிலவரத்தின் படி, மொத்தம் 4.20 கோடி வசூல் ஆனது. அதில் எங்களுக்கான பங்குத்தொகை 2.60 கோடிதான். மீதி 5.40 கோடி எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

காலைக் காட்சி ரத்து

கிறிஸ்துமஸ் விடுமுறை அன்று லிங்கா படத்துக்கு 16 கட்சம் வசூல் கிடைத்தது. புத்தாண்டு அன்று 3 லட்சம் மட்டுமே வசூலானது. ஐந்து பேர் படம் பார்க்க வந்தால் கூட ஒரு காட்சியை ஓட்டுவது வழக்கம். நேற்று ஒரு தியேட்டருக்கு மூன்று பேர் மட்டுமே வந்ததால் காலைக் காட்சி ரத்து செய்யப்பட்டது.

வேந்தர் மூவீஸூக்கு 15 கோடி நஷ்டம்

வேந்தர் மூவிஸ் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய 65 கோடி, கேரளாவில் ரிலீஸ் செய்ய 5 கோடி என மொத்தம் 70 கோடி கொடுத்து 'லிங்கா ' படத்தை வாங்கியது. அதனால், இதுகுறித்து வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் பேசினோம்.

''எங்களுக்கு 15 கோடி நஷ்டம். ஆனால், இந்த நஷ்டத்தொகையை கேட்க மாட்டோம். வியாபாரத்தில் இது சகஜம்'' என்று சொல்லிவிட்டனர்.

'லிங்கா' படத்துக்கு சுமார் 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் நிறுவனம் 15 கோடி தேவையில்லை என்று சொல்லிவிட்டது. அதனால், மிச்சமிருக்கும் 25 கோடியை தமிழக விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கவேண்டும்.

நாங்கள் நஷ்டத்தொகையாக இதை கேட்கவில்லை. லிங்கா படம் 45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, 220 கோடிக்கு வியாபாரம் ஆனது. அந்த லாபத்தில் தான் சொற்பத் தொகையைக் கேட்கிறோம்.

அமைதி காக்கும் ரஜினி

இதுகுறித்து வேந்தர் மூவிஸ், ஈராஸ் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்காததால் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தோம். ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை சந்திக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணாவிடம் மனு கொடுத்தோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. கடந்த டிசம்பர் 30ம் தேதி விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ராகவேந்திரா மண்டபம் சென்றோம். சத்ய நாராயணா, ரஜினியை சந்திப்பது குறித்து எந்த பதிலையும் சொல்லவில்லை.

'லிங்கா' மோசடி

எங்களுக்கு ரஜினியைத்தான் நன்றாகத் தெரியும். தயாரிப்பாளார் ராக்லைன் வெங்கடேஷை நம்பி பணம் போடவில்லை.

'அந்நியன்' வெற்றி பெற்ற தருணத்தில், விக்ரமை வைத்து 'மஜா' படம் தயாரித்தார் ராக்லைன் வெங்கடேஷ். அந்தப் படம் தோல்வியடைந்ததால், கடன் வைத்துவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார். அதற்குப் பிறகு, ரஜினிதான் 'என் படத்தின் தயாரிப்பாளர் 'ராக்லைன் வெங்கடேஷ் ' என்று அறிவித்தார்.

சமீபத்தில் ராக்லைன் வெங்கடேஷ், 'வியாபாரத்தில் லாபம், நஷ்டம் சகஜம். பிசினஸ் பண்ணும்போது லாப, நஷ்டங்கள் வருவதெல்லாம் அவங்கவங்க தலையெழுத்து. இதுக்கு யார் பொறுப்பு ஏற்க முடியும்' என்று கேட்டிருக்கிறார் . ஆனால், இது வியாபாரமே இல்லை. எல்லாமே மிகைப்படுத்தப்பட்டு உள்ளன. காந்தப் படுக்கை, கலசம், மண்ணுளிப்பாம்பு போன்ற மோசடிதான் இதுவும்.

ரஜினியிடம் எதிர்பார்ப்பது என்ன?

இதற்காக ரஜினி தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து எங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ரஜினி தலையிட்டால் இந்தப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்றுதான் சொல்கிறோம். ஆனால், ரஜினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்காக ‘லிங்கா’ படத்தால் திரையங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். இன்றோ அல்லது நாளையோ அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் . ஜனவரி 10ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். இதில் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளார்கள் அலை கடலென திரண்டு வருவார்கள்'' என சிங்காரவேலன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்