இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னையில் சிலை: திரைப்பட இயக்குநர் சங்கம் கோரிக்கை

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில், இயக்குநர் கே.பாலசந்தரின் படத்திறப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது.

பாலசந்தரின் படத்தை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது:

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்துக்கு கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்படும். அவர் இயக்கிய முக்கியமான படங்களைத் தேர்வு செய்து சென்னையில் ஒரு வாரம் திரைப்பட விழா கொண்டாடப்படும். மயிலாப்பூர் லஸ் கார்னரில் பாலசந்தருக்கு சிலை வைக்கவும், அவர் வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள தெருவுக்கு பாலசந்தர் பெயரைச் சூட்டவும் தமிழக அரசுக்கு இயக்குநர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.

பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் பாலச்சந்தருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற் பார்கள். ஏப்ரல் மாதத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில், சிறந்த இயக்குநருக் கான விருது கே.பாலசந்தர் விருது என்ற பெயரில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர்,

எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன், மனோபாலா, வசந்த், ஆர்.வி. உதயகுமார், ஆர்.சுந்தரராஜன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE