தமிழ் சினிமாவில் இது பேய்களின் காலம். பேய்களைக் காட்டி நம்மை மிரட்ட வந்திருக்கும் இன்னொரு படம் தான் புது இயக்குநர் பிரபு யுவராஜின் ‘ர’.
நாயகன் அஷ்ரஃபும் நாயகி அதிதியும் காதலிக்கிறார்கள். நாயகி வீட்டை விட்டு ஓடிவந்து நாயகன் வீட்டில் தங்கிக் கொள்கிறார். அடுத்த நாள் காலை படுக்கையில் நாயகி இறந்து கிடக்கிறார். அதற்குப் பிறகு நாயகன் அஷ்ரப்பை சுற்றிப் பல்வேறு விஷயங்கள் மர்மமான முறையில் நடக்கின்றன. அதற்குக் காரணம் தனது காதலி அதிதியின் ஆவி என்று நினைக்கிறார் அஷ்ரப். ஆவியோடு தொடர்பு கொள்ள முயற்சியும் எடுக்கிறார். மேலும் இரண்டு மரணங்கள் நிகழ, மர்மம் இறுகுகிறது. அவருக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவங்களுக்குக் காரணம் என்ன? மரணங்களுக்கும் இந்த அனுபவங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் சொல்லியிருக்கிறார் யுவராஜ்.
பிரபு யுவராஜ் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. முதல் படத்திலேயே அமானுஷ்யம், திகில் எனக் கடினமான விஷயத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். என்னதான் நடக்கிறது என்னும் சஸ்பென்ஸைக் கிட்டத் தட்டப் படம் முழுவதும் காப்பாற்றுகிறார். படம் முடியும்போது சில கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கின்றன. சில கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன. மூன்று மரணங்களில் இரண்டுக்கான காரணத்தைத் தெளிவாகச் சொல்கிறார். ஒரு மரணத்தின் காரணத்தைப் பார்வையாளர்களின் யூகத் துக்கே விட்டுவிடுகிறார். எல்லாவற்றையும் விளக்க முனையும் சூழலில் இத்தகைய அணுகுமுறை புதுமையானது.
இது பேய்ப் படமா அல்லது அறிவியல் அடிப்படையிலான திகில் படமா என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆவிகள் உலகம், பேராசையால் விளையும் வன்முறை ஆகிய இரட்டைப் பாதைகளில் பயணிக்கும் படம் இரண்டையும் சரியாகக் கையாளவில்லை என்பதுதான் படத்தின் முக்கியமான பிரச்சினை. காதலியின் சாவுக்கும் அக்காவின் சாவுக்கும் காரணம் தெரியவந்த பிறகு, நாயகனுக்கு ஏற்படும் விநோதமான அனுபவங்களுக்கு என்ன காரணம் என்னும் கேள்வி எழுகிறது. கதையின்படி, பேயும் வேறொரு உலகின் மர்மங்களும் இருக்கின்றன என்றுதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. ஹிப்னாடிஸம், ஆவிகள் தொடர்பு, வேறொரு உலகம், சிவப்புக் கதவு என்பவையெல்லாம் எடுக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது படத்தில் ஏன் காமெடி இல்லை என்னும் கேள்வி எழ வாய்ப்பே இல்லை.
நாயகன் தனக்கு ஏற்படும் வித்தியாச மான அனுபவங்களை நிஜமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால் அவன் குடும்பம், நண்பர்கள் ஆகியோர் நடந்துகொள்ளும் விதம் பேய்கள் நடந்துகொள்ளும் விதத்தை விட விசித்திரமாக இருக்கிறது. மர்மமான மரணங்களைக் காவல்துறை கையாளும் விதம் படத்தின் முடிவற்ற விசித்திரங்களில் ஒன்று. யார் பெயரிலாவது கோடிக் கணக் கில் ஆயுள் காப்பீடு இருந்தால் அவரது மரணத்தைக் காவல்துறை அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ளாது.
ஆல்பத்தில் ஆறு பாடல்கள் இருந்தும் அத்தனையையும் பயன்படுத்தாமல் ஒரு முழுப் பாட்டையும் ஒரு துண்டுப் பாட்டையும் மட்டும் பயன்படுத்தியிருப்பது ஆறுதல். படத்தின் நீளத்தை வளர்த்தாமல் இருந்தது இன்னொரு ஆறுதல். நண்பனின் முதலிரவன்று சரக்கு அடிக்க அவன் வீட்டுக்கே நண்பர்கள் வந்துவிடுவதுபோன்ற பல அபத்தங்கள் உள்ளன. நாயகனைத் தவிர எந்தப் பாத்திரத்திலும் இயக்குநர் கவனம் செலுத்தவில்லை. காதலனும் காதலியும் பேசிக்கொள்வதைச் சித்தரிக்கும் விதத்தில் கவனிக்கவைக்கிறார்.
ஒன்று மக்களுக்கு, இன்னொன்று திரை விழாக்களுக்கு என இரண்டு கிளைமாக்ஸ்களை இயக்குநர் எடுத்திருக் கிறாராம். மக்களுக்கான கிளைமாக்ஸுக்குத் திரையரங்கில் ஆதரவு இல்லை. திரை விழா கிளைமாக்ஸ் அறிவுஜீவிகளைக் கவர்ந்து ஏதாவது விருது வாங்கித் தருகிறதா என்று பார்ப்போம்.
ராஜ் ஆர்யனின் பின்னணி இசை, சரவணனின் ஒளிப்பதிவு, ப்ரேம் பூமிநாத னின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு மிகப் பெரிய பலம். வீட்டுக்குள் கதவுகள், அலமாரிகள், கட்டில் என ஒளிப்பதிவாளரின் கேமிரா கோணங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.
நாயகனாக அஷ்ரப் சந்தோஷம், துக்கம், பயம் என முதல் படத்திலேயே சவாலான வேடத்தை ஏற்றிருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நாயகி அதிதிக்கு ரொம்பவே சிறிய வேடம்.
‘ர’ என்றால் அபகரித்தல் என்று தொல்காப்பியம் சொல்கிறதாம். ‘ர’ படம் நம் நேரத்தை அபகரிக்கிறது என்று சொல்லத் தொல்காப்பியம் தேவையில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago