அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தன் மனைவியுடன் சென்னை மழை வெள்ளத்தில் சிக்கினால் அதிலிருந்து மீண்டுவரப் போராடினால் அதுவே 'ஹவுஸ் ஓனர்'.
கர்னல் வாசுதேவன் (கிஷோர்) ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். 60-வது வயதில் அவருக்கு அல்ஸைமர் எனும் மறதி நோய் வந்துவிடுகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நோயின் பாதிப்பு தொடர்வதால் கிஷோருக்கு தன் இள வயது குறித்த நினைவுள் மட்டுமே மிஞ்சுகின்றன. 25 வயது இளைஞனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும் கிஷோர், கண்ணாடியில் தன் முகம் பார்த்து யாரோ ஒருவன் வீட்டுக்குள் வந்து விட்டதாக தன்னைத் தானே விரட்டுகிறார்.
மனைவி ராதாவை (ஸ்ரீரஞ்சனி) அவரால் அடையாளம் காண முடியவில்லை. யாரோ ஒருவர் என்று நினைத்தே சத்தம் போடுகிறார். மகள் போனில் பேசினால் யார் நீ என்று கேள்வி கேட்கிறார். யார் எது சொன்னாலும் நீ யார் எனக்கு உத்தரவு போட என்று எகிறுகிறார். இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளம் பெரிய அளவில் வர பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்.
ஆனால், கிஷோர் டிபன்ஸ் காலனியில் இருக்கும் தன் சொந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார். இந்நிலையில் பெருவெள்ளத்தால் அவர் வசிக்கும் வீடும் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட ஸ்ரீரஞ்சனியும், கிஷோரும் என்ன ஆகிறார்கள், வெள்ளத்திலிருந்து அவர்கள் மீண்டார்களா, வீட்டை விட்டு அவர்களால் வெளியேற முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
சென்னையில் பேரழிவையும் பெரும் துயரத்தையும் ஏற்படுத்திய 2015 பெருவெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு படம் இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' படங்களுக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணனின் நான்காவது படமான 'ஹவுஸ் ஓனர்' தொழில்நுட்ப ரீதியில் மற்ற மூன்று படங்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது. ஆனால், கதை- திரைக்கதையில்தான் இலக்கே இல்லாத படமாகத் திசை தெரியாமல் தேங்குகிறது.
அல்ஸைமரால் பாதிக்கப்பட்டவராக 'ஆடுகளம்' கிஷோர் நடித்துள்ளார். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது என்று நோயின் பாதிப்பை நடிப்பில் வெளிப்படுத்தும் அவர் அதையே படம் முழுக்க ரிப்பீட் செய்வதால் பொம்மையைப் போல நடந்துகொள்கிறார்.
புலம்பாமல், அழுது வடியாமல் கிஷோரைச் சமாளிக்கும் ஸ்ரீரஞ்சனியைப் பார்த்தால் பரிதாபமே மேலோங்குகிறது. ஆனால், அலட்டிக்கொள்ளாமல் அவர் இயல்பாக நடித்திருப்பது ஆறுதல். 'பசங்க' கிஷோரின் வெள்ளந்தி முகம் அவரை ராணுவ வீரராகவும், திருமணம் ஆன இளைஞராகவும் ஏற்க மறுக்கிறது. லல்வின் சந்திரசேகர் அறிமுக நடிப்பில் கவனிக்க வைக்கிறார். சேத்தன், 'கவிதாலயா' கிருஷ்ணன் ஆகியோர் படத்தில் வந்து போகின்றனர்.
கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவில் தபஸ்நாயக்கின் ஒலிக்கலவையில் மழையின் வாசத்தை உணர முடிகிறது. ஜிப்ரானின் பின்னணி படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
படத்தில் கிஷோர் தன் கடந்த காலத்தை மட்டுமே சிலாகிக்கும் அளவுக்கு அவரது திருமணம், மனைவி மீதான அன்பு குறித்து நினைவுகூரப்படுகிறது. பாலக்காட்டு மொழியைப் பயன்படுத்தியிருப்பது படத்துடன் ஒட்டாமல், அந்நியமாகவே இருக்கிறது. கிஷோரும், லல்லினும் அந்த மொழியை லாவகமாகப் பயன்படுத்தத் தெரியாமல் திணறுகிறார்கள்.
சென்னை வெள்ளம் கொடுத்த பதைபதைப்பு, பதட்டம், இழப்புகள், வலி என்று எதையும் படம் நமக்குக் கொடுக்கவில்லை. அதனாலேயே இறுதி வரை எது நடந்தாலும் ரசிகர்கள் எந்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தேமே என்று இருக்கிறார்கள்.
திருப்பமே இல்லாமல் ஒரே மாதிரியான நிதான கதியுடன் நகர்கிறது படம் என்று பார்த்தால் ஒரு பாம்பு வருகிறது. அதுவும் கடைசிவரை பெட்டிப்பாம்பாக சுருண்டே கிடக்கிறது. அந்த வெள்ளப் பாதிப்பு வெறுமனே கிளைமாக்ஸுக்கு மட்டும் காரணியாக அமைந்துள்ளது. மொத்தத்தில் 'ஹவுஸ் ஓனர்' எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்து போகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago