அரசுப் பேருந்து மோதியதில் இரு கைகளையும் இழந்த இளைஞன், நஷ்ட ஈடு கோரி நீதிமன்றதுக்கு அலைந்தால் அதனால் இழப்புகள் நேர்ந்தால் அதுவே 'தோழர் வெங்கடேசன்'.
காஞ்சிபுரத்தில் சோடா ஃபேக்டரி நடத்துகிறார் வெங்கடேசன் (அரிசங்கர்). உடன் படித்தவர்கள் எல்லாம் சூப்பர்வைசர், டிரைவர் என்று சென்னையில் செட்டில் ஆகி பண்டிகை காலங்களில் மட்டும் ஊருக்கு வந்து செல்கின்றனர். ஆனால், தான் ஒரு முதலாளி என்ற பெருமையில் அன்றாடம் 250 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார். இதனால் யாரும் பெண் கொடுக்கவும் மறுக்கின்றனர். தள்ளுவண்டிக் கடையில் இட்லி சுட்டு விற்கும் அக்கா இறந்துவிட, அவரின் மகளை அம்மா போல பார்த்துக்கொள்வதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வருகிறார். இருவருக்கும் ரொம்பவே பிடித்துப் போகிறது. மகிழ்ச்சியாக நாட்கள் கழிய, திடீரென்று அந்த விபத்து நிகழ்கிறது. சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து அரிசங்கர் மீது மோதுகிறது. இதனால் அவர் தனது இரு கைகளையும் இழக்கிறார். இதனால் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்கிறார்.
வழக்கு தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், அப்பணம் கிடைக்காமல் தொடர்ந்து அலைகிறார். மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட, அரசுப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்து அரிசங்கரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அரிசங்கரின் வாழ்க்கை மாறியதா, அவரையே நம்பி வந்த மோனிகா என்ன ஆனார், கைகளை இழந்த நிலையில் என்ன தொழில் செய்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
ஒரு சம்பவம் சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை அரசியல் கலந்து பதிவு செய்துள்ள இயக்குநர் மகாசிவனுக்கு வாழ்த்துகள். உண்மை, நேர்மை, எளிமை ஆகியவற்றையே தகுதிகளாக் கொண்டு தரமான படத்தைக் கொடுத்துள்ளார்.
வெங்கடேசனாக அரிசங்கர் அற்புதமான நடிப்பில் மனதில் நிற்கிறார். 'என் கை போச்சே' என்று கதறும்போதும், சேகர் அண்ணே மன்னிச்சிடு என்று பவ்யமாகச் சொல்லும்போதும், முதலாளி என்று கெத்து காட்டும்போதும், சரளா கதையை அப்புறம் சொல்வதாகத் தள்ளிப்போடும் போதும், ஸ்டேஷனுக்குள் தன்னிடம் வேலை செய்யும் சிறுவனிடம் கெஞ்சும்போதும் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். பஸ்ஸுக்குப் பாதுகாப்பு வழங்காவிட்டால் கோர்ட்டில் போட்டுக் கொடுத்துடுவேன் என்று போலீஸிடமே போட்டு வாங்கும் விதம் பலே.
கமலி கதாபாத்திரத்தில் மோனிகா சின்னகொட்லே நல்ல அறிமுகம். அம்மாவின் இழப்பை எண்ணி வருந்துவது, ஊராரின் கண்கள் மேயும் கையறுநிலையில் தப்பான முடிவுக்குத் துணிவது, அரிசங்கரின் அன்பில் திளைத்து வேலையில் உறுதுணை புரிவது என படம் முழுக்க தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.
டிராக்டர் ஓட்டியே பழக்கப்பட்டு பஸ் ஓட்டுவதில் சுணக்கம் காட்டும் சேகர் அண்ணன், தப்பை மட்டுமே சரியாகச் செய்யும் கவுன்சிலர், பக்கத்து வீட்டு மனிதர், திலீபன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
வேதா செல்வம் கோயில் நகரமான காஞ்சிபுரத்தையும், கடைத்தெருக்களையும், அழகான வீடுகளையும் இயல்பு மாறாமல் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். சகிஷ்னாவின் பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. காரில் வரும் அடையாளம் தெரியாத இளைஞர்கள் காட்டுக்குள் அசம்பாவிதம் செய்ய முயல்வதை இயக்குநர் மகாசிவனும், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணாவும் கத்தரி போட்டுத் தூக்கியிருக்கலாம்.
கோர்ட், சட்டம், போலீஸ் எல்லாமே என்னை மாதிரி ஏழைகளைத் தண்டிக்கத்தானா சார், அரசாங்கம் தப்பு செஞ்சா எதுவும் செய்யாதா சார் என்ற ஒற்றை வசனத்தில் படத்தின் உள்ளடகத்தைச் சொல்லிவிடுகிற திறமை இயக்குநர் மகாசிவனுக்கு வாய்த்திருக்கிறது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். சோடா ஃபேக்டரி, கடைகளுக்கு சோடா போடுவது, நண்பர்களுடன் பேச்சு என எல்லாவற்றிலும் யதார்த்தத்தை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளார். பல்வேறு பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எளிய மனிதனின் காதலை ஜீவனுடன் படைத்துள்ளார்.
பஸ் ஜப்தி செய்து அரிசங்கரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கதை நகராமல் தேங்கிவிடுகிறது. அதனாலேயே சாமியார் வருவது, பேய் ஓட்டுவது என திரைக்கதைக்குத் தேவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கலவரம், கல் எறிதல் சம்பவம் ஆகியவையும் படத்துக்கு வலுவூட்டவில்லை. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் எளிமையான மனிதனின் வாழ்க்கையை அச்சு அசலாகப் பதிவு செய்த விதத்தில் 'தோழர் வெங்கடேசன்' தனித்து நிற்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago