அடையாளம் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுத்து அவர்களை சாதிக்க வைக்கும் நல்லாசிரியரின் கதையே 'ராட்சசி'.
புதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). பள்ளிக்கு 10 அடி தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடையில் சிகரெட் விற்பது, ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் ஓபி அடிப்பது, கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்புக்காக மாணவர்களை அனுப்புவது போன்ற அவலங்களைக் கண்டு வெடிக்கிறார். இதனால் உதவி தலைமை ஆசிரியர், உள்ளூர் அரசியல்வாதி, தனியார் பள்ளி தாளாளர் என்று நிறைய எதிரிகளைச் சம்பாதிக்கிறார். அவர்கள் ஜோதிகாவை அவமானப்படுத்தும் நோக்கில் காய் நகர்த்துகின்றனர்.
ஏனோ தானோவென்று எந்த இலக்கும் இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன ஆகிறார்கள்? உள்ளூர் அரசியல்வாதி மனம் மாறினாரா? உதவி தலைமை ஆசிரியர் என்ன ஆனார்? தாளாளரின் சதித் திட்டம் வென்றதா? ஒரு நல்லாசிரியராக ஜோதிகாவால் சாதிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
அரசுப் பள்ளியையும் அதில் படிக்கும் மாணவர்களையும் பணிபுரியும் ஆசிரியர்களையும் முக்கியக் களமாகக் கொண்டு படம் இயக்கியுள்ளார் கௌதம்ராஜ். அவரின் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் வாழ்த்துகள்.
தலைமை ஆசிரியருக்கான தோரணையில் கீதாராணி கதாபாத்திரத்தில் ஜோதிகா சரியாகப் பொருந்துகிறார். 'என்னை நீங்க கீதாராணின்னே கூப்பிடலாம்' என்று மாணவிகளுடன் ஃப்ரெண்ட்ஸ் ஆவது, சிகரெட் விற்கும் கடைக்காரரை வழிக்குக் கொண்டு வருவது, உள்ளூர் அரசியல்வாதியின் மகனுக்குள் தீப்பொறியைப் பற்ற வைப்பது, ஆசிரியர் முத்துராமனுக்குள் இருக்கும் பொறுப்பை வெளிக்கொண்டு வருவது, 'தப்பு பண்ணாதான் பயப்படணும்' என அறிவுரை பகிர்வது என தலைமைத்துவப் பண்புகளில் பக்குவத்தை வெளிப்படுத்துகிறார். அப்பா இறந்த சூழலில் கூட அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டு பள்ளிக்கு வந்து கண்ணீர் மல்க உருகும் காட்சியில் தேர்ந்த நடிப்பில் ஜொலிக்கிறார்.
பூர்ணிமா பாக்யராஜுக்கு சிறிய கதாபாத்திரம்தான். சில காட்சிகளே வந்து போனாலும் நிறைவாக நடித்துள்ளார். சவுண்ட் பார்ட்டியாக அருள்தாஸும், பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் கவிதா பாரதியும், தனியார் பள்ளி தான் கவுரவம் என்று நினைக்கும் பெற்றோரின் மனநிலையை காசாக அறுவடை செய்யத் துடிக்கும் தாளாளர் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பெராடியும் நோக்கம் அறிந்து நியாயம் செய்திருக்கிறார்கள்.
ஆட்டோ டிரைவராக வரும் மூர்த்தியும், ஜோதிகாவின் தந்தையாக நடித்த நாகி நீடுவும், 'உங்களை நான் பொண்ணு பார்க்க வரட்டுமா' என்று கொஞ்சல் மொழியில் பேசும் கதிரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
கோகுல் பினாய் பள்ளிக்கூட சூழலையும் மாணவர்களின் இயல்பையும் கண்களுக்குள் கடத்துகிறார். ஷான் ரோல்டன் இசையில் றெக்க நமக்கு பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் உழைப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். படம் முழுக்க நிறைய காட்சிகள் மான்டேஜ் பாணியில் உள்ளன. அதை எடிட்டர் பிலோமின்ராஜ் குறைத்திருக்கலாம்.
''எதிர்க்குறவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்னை எதிர்க்கிறவங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்'', ''தீமை நடக்கிறதென்று சொல்லி அதைத் தடுக்காமல் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதி ஆகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்'', ''வறுமைக்கோட்டுக்குக் கீழ இருக்குறவங்க அரசுப் பள்ளியில படிக்குறாங்க. அவங்களுக்கு உயர் கல்வியில் 50% இடம் ஒதுக்கினால் வறுமைக்கோட்டைப் போக்கலாம்'' போன்ற வசனங்கள் மூலம் பாரதி தம்பியும், கௌதம் ராஜும் கவனிக்க வைக்கிறார்கள்.
அரசுப் பள்ளியில் இருக்கும் குறைகள், பிரச்சினைகள், பிரேயர் நடக்காமல் இருப்பது, மாணவர்கள்- ஆசிரியர்களின் ஒழுங்கீனம், ஆசிரியர்கள் அப்டேட் ஆகாமல் இருப்பதன் ஆபத்து போன்றவற்றை இயக்குநர் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. ஆனால், ஒரு முழு படத்தை நகர்த்திச் செல்வதற்கு இந்த அம்சங்கள் மட்டும் போதுமானதாக இல்லை. ஜோதிகாவின் பின்புலம் திரைக்கதையில் எந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏன் சுவாரஸ்யத்தையும் கூட ஏற்படுத்தவில்லை. அது வெறுமனே கடந்துபோகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் தொடர்ந்து வன்மத்துடன் இருப்பதும், அவர் பழிவாங்க தக்க தருணதுக்காகக் காத்திருப்பதும் செயற்கையாக உள்ளது. தனியார் பள்ளிகளை விஸ்தரித்துக்கொண்டு செல்லும் தாளாளர் ஒரு அரசுப் பள்ளியைக் கண்டு அஞ்சுவதும் அப்பள்ளியை அழிப்பதற்காக திட்டம் தீட்டுவதும் நம்ப முடியாத வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மாணவர்கள் 82 பேரை அரசுப் பள்ளி பெயில் செய்வது படத்தின் முக்கிய மையம். ஆனால், அதன் விளைவுகளை நம்பி இரண்டாம் பாதி இருப்பது பலவீனம். ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டி, இலக்கியப் போட்டியில் மட்டும் மான்டேஜ் காட்சிகள் வருவது இயல்பு. ஆனால், படம் முழுக்க மான்டேஜ் காட்சிகள் வருவது அலுப்பு. நல்ல கருத்துகள் மட்டுமே நல்ல படத்துக்குப் போதுமானது அல்ல என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.
நல்லாசிரியரின் கனவுக்கும், அரசுப் பள்ளிகளின் மாற்றத்துக்கும் நல்வடிவம் கொடுத்திருக்கும் 'ராட்சசி'யை கருத்து சொல்லியாக மட்டும் வரவேற்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago