பணத்துக்காக வங்கியில் கொள்ளையடிக்கும் நால்வர், விவசாயப் பிரச்சினைக்காக திடீர் கோரிக்கை வைத்தால் அதுவே 'கொரில்லா'.
பஸ்ஸில் பயணிக்கும் போது சக பயணிகளின் பணத்தைச் சுருட்டுவது, மெடிக்கல் ஷாப்பில் பகுதி நேர வேலை செய்தபடி அங்கிருந்து மருந்துகளைத் திருடுவது, போலி டாக்டராகச் செயல்படுவது என சின்னச் சின்னதாக முறைகேடுகள் செய்கிறார் ஜீவா. இன்ஜினீயரிங் படித்து சாஃப்ட்வேரில் வேலை செய்த சதீஷ், ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையை இழக்கிறார். சினிமாவில் நடிகனாகும் முயற்சியில் இறங்குகிறார் விவேக் பிரசன்னா. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த மதன் நண்பனின் பேச்சைக் கேட்டு பிழைப்பு தேடி சென்னை வருகிறார். இந்த நான்கு பேரும் பணத்தேவையின் காரணமாக கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர்.
ஹாலிவுட் படம் பார்த்து திட்டத்தைச் செயல்படுத்த ஒரு ரிகர்சல் பார்க்கின்றனர். அது சொதப்பலில் முடிகிறது. ஆனாலும், நம்பிக்கையுடன் வங்கியை முற்றுகையிட்டு கொள்ளையடிக்கின்றனர். ஆனால், போலீஸ் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. எந்த வித ஆபத்தும் இல்லாமல் அவர்களால் வெளியே வர முடிந்ததா? கொள்ளையடித்த பணம் என்ன ஆனது, படத்தில் சிம்பன்சி குரங்குக்கு என்ன வேலை, ஷாலினி பாண்டே வங்கியில் சிக்கிக் கொள்வது எப்படி, விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
நகைச்சுவையை நம்பி களம் இறங்கிய இயக்குநர் டான் சான்டி பின் அழுத்தமான ஒரு பிரச்சினையை அழகாகப் பதிவு செய்துள்ளார். விவசாயிகள் பிரச்சினை குறித்துப் பேசுவதே சினிமாவில் ஃபேஷன் ஆகிவிட்ட தருணத்தில் அதற்கான ஃபினிஷிங் டச் கொடுத்து இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தை நிறுவுகிறார்.
சில தோல்விப் படங்களால் துவண்டு போன ஜீவாவுக்கு 'கொரில்லா' நல்ல உற்சாகத்தைக் கொடுக்கக்கூடும். ஜீவா கதாபாத்திரத்தின் தேவையை உணர்ந்து அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இனி கான்செப்ட் சினிமா பக்கம் ஜீவாவை அடிக்கடி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை கொரில்லா ஏற்படுத்தியுள்ளது. சிம்பன்சி மீதான பாசத்தை வெளிப்படுத்துவது, ஷாலினி பாண்டே மீதான காதலில் மயங்குவது, தனி நபர் பிரச்சினையை மறந்து பொதுப் பிரச்சினைக்காக மனம் மாறுவது, நண்பர்களுக்கு ஆதரவாக நிற்பது என ஜீவா கமர்ஷியல் நாயகனுக்கான அம்சங்களை கச்சிதமாக நிறைவேற்றுகிறார்.
படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு எந்த வேலையும் இல்லை. வழக்கம் போல் ஹீரோவுடன் மோதல், காதல், ஊடல், கூடல் என வரிசை மாறாமல் நடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
சதீஷ், விவேக் பிரசன்னாவின் காமெடி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. 'யோகி' பாபுவின் வருகைக்குப் பிறகு நகைச்சுவை தெறிக்கிறது. 'லொள்ளு சபா' சாமிநாதன், ராதாரவி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
குருதேவின் ஒளிப்பதிவும் சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.
அலட்டிக்கொள்ளாமல் ஒரு படம் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் டான் சான்டி. அதனால் லாஜிக் பிரச்சினையைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. சிம்பன்சி குரங்கை வைத்து பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார். ஆனால், அதில் எந்தப் புதுமையும் இல்லை. திடீரென்று வங்கிக் கொள்ளையின் போது முகமூடியைக் கழற்றுவது, காதலியுடன் ஜீவா சண்டை போடுவது எல்லாம் அவசரக் கோலம். யோகி பாபுவையும், ஷாலினி பாண்டேவையும் உருவ கேலி செய்வதை தவிர்த்திருக்கலாம்.
இந்த அம்சங்களைத் தவிர்த்துப் பார்த்தால் நகைச்சுவையில் தடம் பதிக்கிறார் இயக்குநர். வழக்கமான கமர்ஷியல் படத்தில் விவசாயப் பிரச்சினையை வலுவாகச் சொல்லியிருக்கிறார். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் விதம் சினிமாத்தனமாக இருந்தாலும் காட்சி ரீதியாக அது எடுபடுகிறது. கலகலப்பான படத்தில் கருத்துகளைத் தூவிய விதத்தில் 'கொரில்லா'வை சிரித்துக்கொண்டே ரசிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago