த
ங்கமீ்ன்கள் படத்தில் ‘செல்லம்மா’வாக தெத்துப் பல் தெரிய சிரித்து, ‘அப்பா.. அப்பா..’ என்று கிசுகிசு குரலில் பேசி மனதைக் கவர்ந்தவர் சாதனா. அந்தப் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், ‘தரமணி’ படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள ‘பேரன்பு’ படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
அம்மா, அப்பா, அக்காவுடன் துபாயில் வசித்துவரும் சாதனா, தனது பரதநாட்டிய அரங்கேற்றத்துக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடன் ஒரு நேர்காணல்..
இத்தனூண்டு வயசில் தேசிய விருது, பாராட்டுகள் எல்லாம் பெற்றீர்கள். ஆனால், ‘தங்கமீன்கள்’ படத்துக்கு பிறகு ஏன் சினிமாவில் முகம் காட்ட வில்லை?
‘தங்கமீன்கள்’ படம் 2013-ல் ரிலீஸானது. அதுக்கு மொத வருஷம்தான் சென்னையில் இருந்து துபாய் போனோம். தவிர, ராம் அங்கிள் எனக்கு அப்பா மாதிரி. அதனால, அவரது படத்தில் மட்டும்தான் நடிக்கணும்னு உறுதியா இருந்துட்டேன். தொடர்ந்து படங்களில் நடிக்காததுக்கு அதுவும் ஒரு காரணம். அதனாலதான் இவ்ளோ இடைவெளி.
இந்த சாதனாவைப் பார்த்தால் ‘தங்கமீன்கள்’ செல்லம்மா போலவே தெரியலியே?
‘தங்கமீன்கள்’ படத்துக்கு 2014-ல் தேசிய விருது அறிவிச்சாங்க. அதுதொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வந்தப்போகூட, என்னை பலருக்கும் அடையாளம் தெரியல. 2-ம் வகுப்பு படிக்கும்போது ‘தங்கமீன்கள்’ படத்தில் நடிக்க செலெக்ட் ஆனேன். 3, 4-வது படிக்கும்போது ஷூட்டிங் நடந்துச்சு. 5-வது படிக்கும்போது டப்பிங் பேசினேன். நான் 6-வது படிக்கும்போதுதான் படம் ரிலீஸானது. என் பிரண்ட்ஸ் பலரும் அப்பவே, ‘‘ஏய் பொய்தானே சொல்ற. அது நீயில்லை’’ன்னு கிண்டல் பண்ணினாங்க. இப்போ 10-ம் வகுப்பு வந்துட்டேன். மாற்றம் இருக்கத்தானே செய்யும்.
பரதநாட்டியத்தில் ஆர்வம் எப்படி வந்தது?
அம்மா 25 ஆண்டுகளுக்கு மேல நடனத் துறையில் இருக்காங்க. ‘ஸ்ரீபாதம் டான்ஸ் அகாடமி’ன்னு துபாய்ல நடனப் பள்ளி நடத்துறாங்க. நானும் 10 வருஷமா டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். எந்த ஒரு விஷயத்திலும் முழுமை நிலை அடையறது முக்கியமில்லையா.. அதுக்காகதான் சென்னைக்கு வந்து பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தினோம். என் அக்கா சஹானா கர்னாடக இசைப் பாடகி. 3 மணி நேரம் நடந்த நடன அரங்கேற்ற நிகழ்ச்சியில் அவங்க பாட, நான் ஆடியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
ராமின் ‘பேரன்பு’ படத்தில் நடித்திருக்கிறீர்களாமே?
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு ராம் அங்கிள் வந்திருந்தார். ‘‘பேரன்பு படத்தின் கதையையே சாதனாவுக்காகத்தான் எழுதினேன். அவரால் மட்டுமே இதில் நடிக்க முடியும். சாதனா என் பொண்ணு’’ என்று பாராட்டினார். இதைவிட வேறு என்ன வேண்டும்! அந்தப் படத்தில் மம்மூட்டி அங்கிளுக்கு மகளாக நடித்திருக்கிறேன். அப்பா - மகள் பாசத்தை ‘தங்கமீன்கள்’ படம் ஒரு கோணத்தில் பிரதிபலித்ததுபோல, இந்தப் படம் வேறொரு கோணத்தில் பிரதிபலிக்கும். இந்தப் படத்துக்கு உலக அளவில் நல்ல அடையாளம் கிடைக்கும். மம்மூட்டி அங்கிள்கிட்ட இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். குறிப்பாக, கேமரா முன்னாடி எப்படியெல்லாம் முக பாவனைகளை மாற்றுகிறார் என்பதைக் கூர்ந்து கவனித்தேன். ‘பேரன்பு’ படம், எனக்கு மிகப் பெரிய பாடமாக இருந்தது.
சாதனா எப்போ ஹீரோயின் ஆகப் போறாங்க?
அதுக்குள்ள ஹீரோயினா? நான் இன்னும் அந்த அளவுக்கு யோசிக்கவில்லை. நடிப்பு மூலம் கிடைத்திருக்கும் இந்த பாராட்டு, அடையாளம் எல்லாத்துக்குமே ராம் அங்கிள்தான் காரணம். அவர்தான் என்னைக் கண்டுபிடிச்சு சினிமாவுக்கு கொண்டுவந்தார். சினிமாவில் என் எதிர்காலத்தை வடிவமைப்பது அவர் கையில் உள்ளது. அவர் சொல்வதுபோல செய்வேன். ‘தங்க மீன்கள்’ படத்தில் கிடைத்த விருது, அடுத்து ‘பேரன்பு’ படத்துக்கு கிடைக்கப்போற பாராட்டுன்னு எனக்குப் பெருமை தரும் எல்லா விஷயங்களிலும் அவரது பங்களிப்பு கட்டாயம் இருக்கும்!
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago