‘சரவணன் மீனாட்சி’ தந்த அந்தஸ்து!- சின்னத்திரை நடிகை ரச்சிதா பெருமிதம்

By மகராசன் மோகன்

‘‘சினிமாங்கிறது மாத இதழ் மாதிரி. சீரியல்ங்கிறது நாளிதழ் மாதிரி. அன்றைக்கு நடப்பது அன்றோடு முடிந்தது. அடுத்தடுத்த நாள் புதுசு புதுசா விஷயங்களைக் கொடுத்துட்டே இருக்கணும். இப்பல்லாம் சீரியல்களின் பட்ஜெட்டை கேட்கும்போதே மலைப்பா இருக்கு. சினிமாவுக்கு இணையா, அதைவிட பிரம்மாண்டமா சீரியல்கள் உருவாவது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் கடந்த சீசன் 2, சீசன் 3 என்று கடந்த 4 ஆண்டுகளாக மீனாட்சியாக வாழ்ந்துவரும் ரச்சிதாவுடன் ஒரு நேர்காணல்..

ஒரே சீரியலில் 4 ஆண்டுகளாகப் பயணிக்கிறீர்கள். சலிப்பு அடையாமல் ஓட முடிகிறதா?

முதல் சீசனில் இருந்து கதை மாறி மாறி வர்றதால, ஒவ்வொரு வாரமும் புதுசா என்ன பண்ணலாம் என்பதை நோக்கித்தான் மனசு ஓடுது. ‘சரவணன் மீனாட்சி’ 2-வது சீசனோட போதும்னுதான் இருந்தேன். ‘இந்த ஒரு சீசன்தான்’னு சேனல்ல அன்பா கேட்டாங்க. ‘மறுபடியும் மீனாட்சியா’ன்னு முதல்ல சற்று தயங்கித்தான் கமிட் ஆனேன். என்னிக்காவது காட்சிகள் கொஞ்சம் சோர்வா போகுற மாதிரி தெரிஞ்சா, உடனே டிராக்கை மாற்றி மக்கள்கிட்ட ஓ.கே.ன்னு பெயர் எடுக்குறதால நல்லபடியா ரீச் ஆகிட்டிருக்கோம். வெளியில பார்க்கும்போது, ‘எப்போதான் சரவணன் மீனாட்சி’ தொடரை முடிப்பீங்க?’ன்னு கேட்கிறவங்களும் இருக்காங்க. ‘ஒரே மாதிரி சீரியல்ல நடிக்கிறோமே’ன்னு அப்ப தோணும். என்னைப் பொறுத்தவரை, எந்த விஷயமா இருந்தாலும் பாதியில விட்டுட்டு வரக்கூடாது. இப்ப செய்திட்டிருக்கிற வேலையை திறமையா செஞ்சு முடிச்சு நல்ல பேரு வாங்கணும்கிறதுதான் என் ஆசை.



‘எப்பவுமே நடிப்புல மட்டும்தான் கவனம்’ என்று சொல்வீர்கள். இப்போது ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் நடுவராகவும் பார்க்க முடிகிறதே?

எப்பவுமே எனக்கு நடிப்புதான் முக்கியம். மற்ற எதுக்காகவும் அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். நாலைந்து படங்கள் ஹிட் கொடுக்குற நடிகைக்குகூட, ஒரு நிகழ்ச்சியோட நடுவரா பங்களிக்கிற பொறுப்பு அவ்வளவு எளிதாக கிடைக்காது. ‘சரவணன் மீனாட்சி’க்கு அப்புறம் ‘உப்புக்கருவாடு’ன்னு ஒரே ஒரு படத்துல மட்டும்தான் நடிச்சிருக்கேன். இப்பவே நிகழ்ச்சி நடுவர் வாய்ப்பு அமையுதேன்னு உடனே ஓகே சொன்னேன். ‘ஜீ தமிழ்’ல வர்ற ‘ஜூனியர் சீனியர்’ நிகழ்ச்சிக்கு நடுவரா வந்த புதுசுல, ஒரு மாதிரிதான் இருந்தது. போகப்போக அதையும் சாமர்த்தியமா எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அதில், என் கருத்து என்னவா இருக்கும்னு இப்போ ரசிகர்களும் எதிர்பார்க்குறாங்க.







அடுத்த சினிமா எப்போது?



சினிமாவில் ஒரு நடிகை ஏழெட்டு படங்களில் நடித்துப் பெறுகிற இடத்தையும், புகழையும், அந்தஸ்தையும், பாராட்டையும் கடந்த 4 ஆண்டுகளா நடிக்கிற ‘சரவணன் மீனாட்சி’ தொடர் எனக்கு கொடுத்திருக்கு. இனிமேல் நான் சினிமாவில் நடித்துதான் பிரபலம் ஆகணும்னு இல்லை. இந்த இடத்தையே சந்தோஷமா நினைக்கிறேன். ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 3-யில் நடிக்கிற பொறுப்பை நல்லபடியா முடிச்சுக் கொடுத்த பிறகு தான் அடுத்து என்ன என்பதைப் பற்றி யோசிப்பேன்.







உங்கள் கணவர் தினேஷும் தொடர்களில் கவனம் செலுத்துகிறார். நீங்கள் இணைந்து ஒரே தொடரில் நடிக்கும் எண்ணம் இல்லையா?



சினிமாவுக்காக, சீரியல்ல இருந்து சின்ன இடைவேளை எடுத்துக்கொண்டு பயணித்த என் கணவர் தினேஷ், மீண்டும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிக்க ஆரம்பித்திருக்கார். அவரது கேரியரும் நல்லா போய்ட்டிருக்கு. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் ஐடியாவும் இருக்கு. நாங்கள் இருவரும் இப்போது கமிட் ஆகி செய்திட்டிருக்கிற தொடர்கள் முடிந்த பிறகு, அதில் கவனம் செலுத்துவோம்.







நீங்கள் சின்னத்திரைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஏன் டப்பிங் பேசுவதில்லை?



பெங்களூருவில் இருந்து வந்த புதிதில் தமிழ் பேச கொஞ்சம் சிரமப்பட்டேன். இப்போ நல்லா பேசுவேன். ஆனா, டப்பிங் பேசுற அளவுக்கு இன்னும் முன்னேறலை. இப்போ வரைக்கும் என்னை காப்பாற்றிக் கொண்டிருப்பதே என் டப்பிங் ஆர்டிஸ்ட்தான். ஒரு சீரியலில் நடிக்கும்போது இன்னொரு சீரியலில் கமிட்டானால், முதல் சீரியல் நடிப்பில் கவனச் சிதறல் ஏற்படும் என்று நினைப்பேன். அதுபோல, நன்கு நடித்து பெயர் வாங்குவதில்தான் இப்போதைக்கு என் முழு கவனமும் இருக்கிறது. நடிப்பை பாதிக்காத வகையில் இருந்தால், எதிர்காலத்தில் டப்பிங்கிலும் கவனம் செலுத்துவேன்.







சமூக வலைதள கருத்துகள், விவாதங்களுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களை அதிகம் அடிமையாக்கிக் கொள்கின்றனர் என்ற விமர்சனம் உள்ளதே?



தற்போதைய சூழலில் சமூக வலைதள கருத்து பரிமாற்றங்கள் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலைக்கு கூட காரணமாக அமைந்துவிடுகின்றன. நம்முடைய கஷ்டங்களை நம் பெற்றோர், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம். நம்முடன் இருப்பவர்களிடம் 10 நிமிடம் மனசுவிட்டுப் பேசினால் எவ்வளவு பெரிய சிக்கலையும் சரிசெய்ய முடியும். ஆனால், நம்மில் பலரும் அதுக்கு நேரம் செலவிடுவது இல்லை.



சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவதற்கும், விவாதிப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுகிறோம். சமூக வலைதளங்களை ஒரு எல்லை வரை பயன்படுத்துவது போதும் என்று நினைக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்