கற்பனையில் மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய, பிரம்மாண்டமான காட்சிகளை திரையில் சாத்தியமாக்கிக் காட்டுவதுதான் இயக்குநர் ஷங்கரின் ஸ்டைல்.
தொழில்நுட்பத்தில் புதிதாக எது வந்தாலும், உடனே அதனை முதல் ஆளாகப் பயன்படுத்தி விட வேண்டும் என்பதில் கமலுக்குப் போட்டியாக எப்போதும் களத்தில் நிற்பவர். திரையில் எவையெல்லாம் சாத்தியமில்லையோ அது அனைத்தையும் சாத்தியம்தான் என்று ஹாலிவுட்டுக்கு இணையாக நிலைநாட்டி வருபவர்.
தொழில்நுட்பத்தையும் காட்சியமைப்பையும் இணைப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான் என்றநிலையில் தற்போது விக்ரம், ஏமி ஜேக்ஷனை வைத்து இயக்கிவரும் ‘ஐ' படத்தில் என்ன புதுமையைச் சேர்த்து ரசிகர்களை மலைக்க வைக்கப் போகிறார் என்று விசாரித்தபோது, ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் கிடைத்தன. ஷங்கர் படங்களில் கிராபிக்ஸ் நுட்பத்தின் உச்சம் ‘எந்திரன்' என்றால், கண்டிப்பாக ஒப்பனைக் கலையின் உச்சமாக ‘ஐ' இருக்கப் போவது உறுதி என்கிறார்கள். அதுபற்றி ‘தி இந்து’ தமிழ் வாசகர்களுக்காக திரட்டிய பிரத்தியேக ‘ஐ’ பட ஹைலைட்ஸ் இதோ:
# ‘அவதார்', ‘லார்ட் ஆஃ தி ரிங்ஸ்', ‘ஹாபிட்' என உலகளவில் பரபரப்பைக் கிளப்பிய படங்களின் மேக்கப் விஷயங்களில் பட்டையைக் கிளப்பிய ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தை ‘ஐ’ படத்தின் சிறப்பு ஒப்பனைக்காக அழைத்து வந்திருக்கிறார் ஷங்கர். வேட்டா ஸ்டூடியோஸின் லேட்டஸ்ட் மேக்கப் தொழில்நுட்பத்தால் விக்ரமின் லுக் பேசப்படும் என்கிறது ஷங்கரின் வட்டாரம்.
# ‘ஐ' படத்தில் விக்ரமிற்கு மட்டுமில்லாமல், கதையில் இடம்பெறுகிற முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் இந்நிறுவனத்தின் மேக்கப் நிபுணர்களே தங்களது வித்தை மூலம் உயிரூட்டியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஏறக்குறைய 30% காட்சிகளில் ஒப்பனையின் மூலமாக மிரட்ட இருக்கிறார்கள். இந்தப் படத்தின் விக்ரமின் தோற்றங்களில் ஒன்று மனிதனா மிருகமா என்று குழப்பத்தை உருவாக்கும் ஒரு லுக். இதில் விக்ரமின் உருமாற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரளப்போவது உறுதி என்கிறார்கள் ஷங்கரின் உதவி இயக்குநர்கள்.
# கபிலன் வரிகளில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு பாடலுக்காக விக்ரம் நடனமாடியிருக்கிறார். இதற்காகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களான ‘பாஸ்கோ - சீஸர்’ இருவரின் வித்தியாசமான நடன அசைவுகளில் விக்ரம் தூள் கிளப்பியிருக்கிறாராம்.
# இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கிய போது ஷங்கர், நாற்பத்தொரு நாட்கள் சென்னையில் ஷூட் செய்திருக்கிறார். பொதுவாகப் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஷங்கர், இந்தப்படத்திலும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை அதிக நாட்கள் செலவிட்டு எடுத்திருக்கிறார்.
# சில காட்சிகள், ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி ஆகியவற்றை சீனாவில் 45 நாட்கள் எடுத்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டுப் படமாக்கிய காட்சிகள் சீனாவில் படமாக்கிய காட்சிகள்தானாம்.
# சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னை, பெங்களூர், மைசூர், ஒரிசா ஆகிய இடங்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரு பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளைச் சென்னையில் படமாக்கத் திட்டமிட்டு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி படுதீவிரமாக நடைபெற்றுவருகிறது.
# ஏமி ஜாக்சனுக்குத் தமிழ் தெரியாது என்பதால் தமிங்கிலீஷில் எழுதிக் கொடுத்துக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முக்கியமான காட்சிகளை எல்லாம், எப்படிப் பேசவேண்டும் என்று ரெக்கார்ட் செய்து, ஏமி ஜாக்சனைக் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏமி அவ்வாறே பேசி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
# விக்ரமின் எடையை ஷங்கர் குறைக்கச் சொல்லவே இல்லை. ஆனால் அவரே முன்வந்து, எடையைக் குறைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இடையே ஷங்கர் விக்ரமிற்கு போன் செய்து, “சாப்பிடுங்க. ஹெல்த் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விக்ரம் தான் விடாப்பிடியாக உடம்பை அநியாயத்திற்கு இளைக்க வைத்திருக்கிறார்.
# தமிழ் திரை டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் ஃபிலிம் ரோலில் படமாக்கி வருகிறார் ஷங்கர். ஒளிப்பதிவில் பி.சி. ராம் அனைத்துக் காட்சிகளையும் இழைத்திருக்கிறார் என்கிறது படக்குழு.
# ‘ஐ' படத்தில் மொத்தம் 6 பாடல்கள். கபிலன், கார்க்கி இருவரும் தலா மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
# ஹாரிபாட்டர் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் உலகப் புகழ்பெற்ற ரைசிங் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. னிவாஸ் எம்.மோகன் மேற்பார்வையில் ரைசிங் சன் பிக்சர்ஸ் பணியாற்றிவருகிறது.
# படம் தொடங்கப்பட்டபோது, ஒரு பாடலுக்காக மெட்டு ஒன்றைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால் ஷங்கர், இதை வேறொரு சூழ்நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். சில மாதங்கள் கழித்து வேறொரு பாடலுக்கு அந்த மெட்டை உபயோகப்படுத்தலாம் என்று ஷங்கர் கேட்க, ரஹ்மான் “அது போட்டு ரொம்ப காலமாச்சு. புதுசா போட்டுத்தர்றேன்” என்று கூறியிருக்கிறார்.
# அதிக லொகேஷன்கள், செட்டுகள் என நிறைய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். சீனர்களே இந்த இடங்களெல்லாம் எங்கே இருக்க்கிறது என்று அசரும் அளவிற்கு சீனாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் இருக்க போவது உறுதி என்கிறார்கள். ஒவ்வொரு பாட்டையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்று உழைத்திருக்கிறார்கள்.
# சில காட்சிகளையும், புகைப்படங்களையும் ரஜினிக்குக் காட்டியிருக்கிறார் ஷங்கர். அக்காட்சிகள், படங்களை எல்லாம் பார்த்துவிட்டு எப்படி எடுத்தீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டுப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி.
# ஷங்கரின் கிரியேட்டிவிட்டி யைப் பார்த்து, மிரண்டுபோன ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தினர் இனிமேல் என்ன படம் பண்ணினாலும் சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்களாம்.
# ஷங்கர் இதுவரை தொடாத களமான ரெமாண்டிக் த்ரில்லர் வகையில் ‘ஐ’யை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்திருக்கிறார்.
# சின்னப் படங்களின் இயக்குநர்களே 10 உதவி இயக்குநர்களை வைத்துப் பணியாற்றிவரும் இக்காலத்தில் ஷங்கரிடம் 5 உதவி இயக்குநர்கள் மட்டுமே பணியாற்றியிருக்கிறார்கள். 1 அசோசியேட் இயக்குநர், 4 உதவி இயக்குநர்கள். படத்தின் இசைவெளியீட்டை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago