நான் ஹீரோவா மூணு, நாலு படங்கள் நடிச்சிக்கிட்டிருந்த நேரம். திடீர்னு ஒருநாள் என்னோட கல்யாணம் நடந்துச்சு. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. பெங்களூரு, ஹைதராபாத், மும்பைன்னு நான் எங்கே போனாலும் அந்த நேரத்துல அதுதான் பேச்சே. இவ்வளவுக்கும் என்னோட சைடுல இருந்து ஒரு சின்ன அறிவிப்புக்கூட இல்லை. ஆனாலும், இந்தியா முழுக்க பரபரப்பா பேசப்பட்டுச்சு. அப்போ எனக்கு இருபத்தோரு வயசு இருக்கும். கல்யாணம் ஆன ரெண்டு நாட்கள் இந்த உலகமே எனக்கு ஒரு மாதிரி தெரிஞ்சுது. காதலிச்சு கல்யாணம் முடிச்சுக்கிட்டோம்னு எனக்குள்ள சந்தோஷம் இருந்ததைவிட அஞ்சு மடங்கு அதிகமா பயம்தான் இருந்துச்சு.
பள்ளி நாட்கள்ல இருந்து எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அவ்வளவு உறுதியோட சமாளிக்கிற நான் அப்போ ஆடிப்போய்ட்டேன். அதுக்கு காரணம் அம்மா, அப்பாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்கிற பயம்தான்.
ஒரு தடவை நானும், அப்பாவும் ஒண்ணா டிரெயின்ல ஷூட்டிங் போனோம். அப்பாவுக்கு எதிர் பர்த்ல நான் தூங்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ என்னைப் பத்தி பேசுற மாதிரி கேட்டுச்சு. கண்ணைத் திறந்து பார்த்தா எங்க அப்பாதான். அந்த படத்துல நடிக்கிற ஹீரோயின்கிட்ட என்னோட கல்யாண விஷயத்தைச் சொல்லி பயங்கரமா அர்ச்சனை பண்ணிட்டிருந்தார். திட்டினதைத்தாங்க அப்படி சொல்றேன். என்ன பண்றதுன்னே தெரியலை. அப்போ நான் முழுச்சிட்டிருந்தாலும் தூங்குற மாதிரி நடிச்சிட்டிருந்தேன். எங்க அப்பாவோட பூஜை முடியும்னு பார்த்தா தொடர்ந்து அந்த ஹீரோயின்கிட்ட என்னைப் பத்தி அடி பின்னிட்டிருக்கார்.
எனக்கு ஒரு கட்டத்துல ரொம்ப அவசரமா இருந்துச்சு. என்ன அவசரம்னு புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எழுந்திருக்கவும் முடியலை. தூங்கவும் முடியலை. எங்க அப்பா ஒரு சின்ன இடைவெளி விட்டார். டப்புன்னு எழுந்து எஸ்கேப் ஆனேன். அப்பான்னா, பத்து வயசுல என்ன பயம் இருந்துச்சோ, அந்த பயம்தான் அன்னைக்கும். ஏன் இப்பவும் அப்படித்தான் இருக்கேன்!
காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லை. ஆனா, அதுல அப்பா, அம்மாவோட சோகம் கலந்துடக் கூடாது. அந்த நேரத்துல எனக்கு அது பெருசா தெரியலை. இப்போ அது எனக்குப் புரியது. அம்மா, அப்பாதான் எல்லாமும்னு நினைச்சுட்டு ஒரு குழந்தை மாதிரி இருந்த பையன் திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா, அந்த ஷாக் அவங்களுக்கு எப்படி இருக்கும்? அந்த அதிர்ச்சியைத்தான் அவங்களுக்கு அப்போ நான் கொடுத்தேன்.
‘பம்பாய்’, ‘அலை பாயுதே’ படங்களோட கதை மாதிரிதான். எங்க கல்யாணத்துக்குப் பிறகு பையன், பையனோட வீட்லயும், பொண்ணு, பொண்ணோட வீட்லயும் இருக்குற சூழல் அமைஞ்சது. நானும் அப்பா, அம்மாவை பிரிஞ்சி இருக்க முடியாத சூழலால எங்க வீட்டுலதான் இருந்தேன். அதனால ரெண்டு, மூணு நாட்களுக்கு ஒருமுறைதான் நாங்க மீட் பண்ணிப்போம். ரொம்பவே சிரமமான சூழல்ல மாட்டிக்கிட்டிருந்தேன். இப்போ இருக்குற அளவுக்கு டெலிபோன்ல பேசுற வசதியும் அப்போ இல்லை. அப்படியே இருந்தாலும் வீட்ல யாருக்கும் தெரியாம பேசவும் முடியாது. இதையெல்லாம் எப்படி கடந்து வந்தேன்னு இப்போ கூட எனக்கு தெரியலை. ஆனாலும், கடந்தாச்சு.
வெளியில போகும்போதுதான் இந்திய அளவுல கவனிக்கிற பெரிய பெரிய படங்கள் பண்ணிட்டிருக்கேங்குற பேர் எல்லாம். வீட்டுக்கு வந்தா தனிமையில ஒரு ரூம்தான் வாழ்க்கை. அதுலயும் ஷூட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்குள்ள வரும்போது அம்மா, அப்பாவைப் பார்க்காம எப்படி என்னோட ரூமுக்குள்ள போகுறதுன்னு சங்கடமான சூழல் வேற. அதோட, என் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸுங்களைக்கூட என்னால சந்திக்க முடியாது. வெளியில எங்கேயாவது போகும்போதுதான் சந்திச்சிப்போம். வீட்ல ‘எலி’ வெளியில ‘புலி’ன்னு சொல்வாங்களே. அது இதுதான்னு அப்போதான் புரிஞ்சுது எனக்கு.
அப்போ என்கிட்ட ஒரு அம்பாசிட்டர் கார் இருந்துச்சு. அதுல எங்கயாவது போனாக் கூட, நான் எங்கே போறேன்னு கவனிக்கிற வேலையை கார் டிரைவருக்கு வீட்ல கொடுத்திருந்தாங்க. நம்ம வாழ்க்கையில இவ்வளவு எல்லாம் நடந்துதான்னு நினைக்கும்போதே பிரமிப்பா இருக்கு.
சின்ன வயசுலேயே சினிமாவுக்குள்ள வந்ததால ஷூட்டிங்ல வாங்குற சம்பளம் எல்லாம் அம்மா, அப்பாகிட்டதான் போகும். திடீர்னு ஒரு நாள் கல்யாணம் ஆகிடுச்சு. அந்த நேரத்துல கையில காசும் இருக்காது. செலவுக்கு என்ன செய்றது? பெரிய பெரிய படங்கள்ல பிஸியா நடிச்சுட்டிருக்குற ஒரு ஹீரோகிட்ட காசு இல்லைன்னு போய் வெளியிலயும் சொல்ல முடியாது. எப்படி சமாளிச்சேன்னு இப்போ நினைச்சாலும் ஆச்சர்யம்தான். அது ஒரு தனிக் கதை.
இதுக்கு இடையில மீடியா வேற ‘அப்படி இப்படி!’ன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. ‘பிரபுதேவா இந்த வீட்லதான் இருக்கார்!’னு ஒரு வீட்டோட போட்டோவை எல்லாம் எடுத்துப் போட்டு பேப்பர்ல நியூஸ் வந்துச்சு. இவ்வளவுக்கும் எந்தப் பத்திரிகை நண்பர்களிடமும் நான் அதிகமா பேசக் கூட மாட்டேன். ஆனா, என்னைப் பத்தி செய்தி மட்டும் அடிக்கடி வந்துக்கிட்டே இருந்துச்சு. ஆனாலும் அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கலை.
என்னோட கல்யாணத்துக்குப் பிறகு எவ்ளோ பிரச்சினை! கல்யாணம் முடிஞ்சு அவங்கக்கூட எப்படி இருக்க முடியலையோ, அதே மாதிரி அம்மா, அப்பாகூட இருந்தும் முழுமையா இல்லாமல்தான் இருந்தேன். தூங்குற நேரம் மட்டும்தான் ‘அப்பாடா!’ன்னு இருக்கும்.
சில பேருக்கு பணத்தால கஷ்டம் வரும். சிலருக்கு சண்டையால கஷ்டம் வரும். என்னோட வாழ்க்கையில இது மாதிரி எந்த விஷயத்தாலயும் கஷ்டத்தை அனுபவிக்கலை. ஆனாலும், ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துச்சு. அது என்ன? அடுத்த வாரம்...
- இன்னும் சொல்வேன்...
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago