விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் அஜித்!

By ஸ்கிரீனன்

பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தம் வகையில் அஜித் புனேவில் இருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்தார். புனேவில் இருந்து சென்னை இடையேயுள்ள 1,100 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 16 மணி நேரத்தில் கடந்து வந்தார்.

அஜித்திற்கு பைக் ஒட்டுவது ஒன்றும் புதிதல்ல. சந்தைக்கு புதிதாக எந்த பைக் வந்தாலும், தனது நண்பர்களான பைக் ரேஸர்களிடம் அதனைப் பற்றி கேட்டு ஆர்வமாக தெரிந்துக் கொள்வார்.

தற்போது புதிதாக ‘பி எம் டபிள்யூ கே 1300 எஸ்’ என்ற நவீன வசதிகளைக் கொண்ட பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த பைக்கிலும், அஜித் அணிந்திருந்த ஹெல்மெட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.

அவர் நடித்த ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் ‘பேட்ச் ஒர்க்’ மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றார். மும்பையில், ‘ஆரம்பம்’ பட வேலையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புனே சென்று, ‘வீரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடைய புதிய பைக் விமானம் மூலம் புனேவுக்கு கொண்டுவரப்பட்டது.

‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்ததும், அஜித் மீண்டும் தனது பைக்கில் பயணத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அவர் பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர் மனோகர் இன்னொரு பைக்கில் வந்தார். வழியில், இருவரும் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார்கள். நேற்று அதிகாலை 2 மணிக்கு இருவரும் சென்னை வந்து சேர்ந்தார்கள். புனேயில் இருந்து 16 மணி நேரத்தில், மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து சேர்ந்தார் அஜித்

இப்பயணம் குறித்து அஜித் “ பைக் ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக, ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் மரணம் அடைய நேர்கிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், போக்குவரத்து விழிப்புணர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே நான் பைக்கில் பயணம் மேற்கொள்கிறேன்.

புனேயில் இருந்து சென்னைக்கு பைக் ஓட்டி வந்தது, ஒரு தியானம் போல் இருந்தது. ஒரு தவம் போல் இருந்தது. நம் நாட்டில் போக்குவரத்து கலாசாரம் இன்னும் மேம்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE