முதல் பார்வை: பிருந்தாவனம் - அன்பின் மொழி!

By உதிரன்

அன்புக்காகவும், பாசத்துக்காகவும் ஏங்கும் மாற்றுத் திறனாளியின் கதை 'பிருந்தாவனம்'.

வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி அருள்நிதி. ஊட்டியில் உள்ள ஒரு சலூனில் முடி திருத்துபவராக வேலை பார்க்கிறார். சேற்றில் சறுக்கி நிற்கும் விவேக் காரை தூக்கி நிறுத்தி அவருக்கு நண்பர் ஆகிறார். தன்னையே பின் தொடர்ந்து நேசிக்கும் தான்யாவின் காதலை அருள்நிதி ஏற்க மறுக்கிறார். அதற்குக் காரணம் என்ன, அவருக்குள் இருக்கும் ரகசியம் என்ன, காதலை ஏற்றுக்கொண்டாரா என்பதே திரைக்கதையின் அடுத்தடுத்த நகர்வுகள்.

உறவின் உன்னதத்தையும், அன்பின் மகத்துவத்தையும் பிருந்தாவனம் மூலம் புரிய வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.

சோகமும் ஆற்றாமையுமாக தன் கதை சுருக்கம் சொல்லும் அருள்நிதி அனுதாபம் மூலமாவது அன்பு கிடைக்க வேண்டும் என்று தன் பக்க நியாயத்தை சொல்கிறார். அழுகை, சிரிப்பு, கோபம் என சைகை மொழியில் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அருள்நிதி கச்சிதம். அவருக்கான ரகசியத்தை உடைத்துவிட்டு நடிக்கும் காட்சிகளில் எந்த ஈர்ப்பும், நடிப்புக்கான முக்கியத்துவம் இல்லை.

புத்திசாலித்தனமான நாயகியாக தான்யா தன் பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார். மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் போது 'கணபதி அங்கிள்னா. வடிவேலுவுக்கு பேக்கரி எழுதிக் கொடுத்தவரா' என நக்கல் அடிக்கிறார். தன் காதலைப் புரிய வைக்கும் இடத்தில் தனித்து தெரிகிறார்.

விவேக் நடிகராகவே வருகிறார். இயல்பும், அனுபவமும் கலந்த குணச்சித்ர நடிப்பை நகைச்சுவை கலந்து பக்குவமாக வழங்கி படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் ஒற்றைக் காட்சியில் நம்மை உருக்கிவிடுகிறார். நாயகியிடம் மன்னிப்பு குறித்து விளக்கும் விதத்தில் தேர்ந்த நடிப்பை நல்கி இருக்கிறார்.

'என்ன வெயிலு.. சென்னையில சொல்லியே பழகி இப்போ ஊட்டியிலயும் சொல்றேன்' என ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் செல் முருகன்.

டவுட் செந்தில், தலைவாசல் விஜய், பஞ்சு சுப்பு ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

பார்த்துப் பழகிய ஊட்டியின் வண்ண மயத்தை அப்படியே கேமராவில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேகானந்தன். விஷால் சந்திரசேகர் இசையில் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜெய்யின் எடிட்டிங் ஆங்காங்கே சோதிக்கிறது.

முதல் பாதியை நகைச்சுவையோடும், நெகிழ்ச்சியோடும் நகர்த்திச் செல்லும் ராதாமோகன் இரண்டாம் பாதி திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறுகிறார். அருள்நிதி சொல்லும் தன் வரலாறு அழுத்தமாகவும், ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை. நாடகத் தனமான காட்சிகள் படத்துடன் ஒன்றச் செய்யவில்லை.

மொத்தத்தில் மென்மையாக, நேர்மையாக அன்பின் மொழியைச் சொன்ன விதத்துக்காக பிருந்தாவனத்தை ரசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 secs ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்