அஜித்தின் பாராட்டு: அஸ்வின் நெகிழ்ச்சி

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில், அஜித் தன்னை பாராட்டியது குறித்து மிகவும் நெகிழ்ந்திருக்கிறார் அஸ்வின்

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேன, கபீர் கான், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை 'வீரம்' சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு 'மங்காத்தா' படத்தில் அஜித்துடன் நடித்த அஸ்வின் சென்றிருக்கிறார். அஜித்தை சந்தித்தது குறித்து, "நான் எப்போதும் அஜித் உடனான எனது சந்திப்புகளைப் பற்றி பெரிதாக பகிர்ந்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்தைப் பற்றி கூற வேண்டும் என நினைக்கிறேன். நேற்று தல56 பட தளத்துக்கு சென்றேன். முதலில் சண்டைப் பயிற்சியாளர் சில்வா அவர்களின் அணியைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தேன். எனது படங்கள் குறித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

கபிர் இந்த படத்தின் வில்லன். மிகச் சிறந்த வில்லனாக வருவார். 100 சதவீத உழைப்பை அவர் அளிக்கிறார். ரசிகர்களுக்காக பல சிறப்பான விஷயங்கள் காத்திருக்கின்றன. (தீம் பாடல் வெறித்தனமாக இருக்கிறது). கடைசியாக, அஜித் சார் என்னை கபீர் சிங்கிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ''இது அஸ்வின், என்னுடன் மங்காத்தாவில் நடித்தார். நல்ல நடிகர் '' என்றார். ஒரு சீனியர் நடிகரிடமிருந்து இந்த வார்த்தை வருவதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்.

இன்று வரை அது என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பகிர்கிறேன். மொத்தத்தில் பட தளத்தில் சிறந்த சூழல் நிலவுகிறது." என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார் அஸ்வின்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE