சந்திரஹாசன் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்: கமல் உருக்கம்

சந்திரஹாசன் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும் என்று கமல்ஹாசன் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனுக்கு சென்றிருந்த போது அங்கு காலமானார். ராஜ்கமல் நிறுவனத்தை நிர்வாகித்து வந்தவர் சந்திரஹாசன். கமல்ஹாசனுக்கு நெருக்கமான நண்பர்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் சந்திரஹாசன்.

சந்திரஹாசனுக்கு இரங்கல் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமல், ரஜினி, சத்யராஜ், நாசர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசியது, "சகோதரனாக எப்படியிருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன் அண்ணா. அவருடைய அறிவுரைகள் எல்லாம் கருத்துகளாகவே வந்தன. சந்திரஹாசன் போன்றவர்களால் மட்டுமே அறிவுரைகளை கருத்துகளாக சொல்ல முடியும். அண்ணன் என்பது ரத்தத்தினால் கிடைத்த உறவு. அவருடன் ஏற்பட்ட உறவு தனிப்பட்ட ஒரு பாக்கியமாக கருதுகிறேன். அது போல எனக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் உண்டு.

எனக்கு பல விஷயங்கள் நடைபெறும் போது, ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது என கவலைப்பட்டதே இல்லை. அதற்குக் காரணம் என் குடும்பம். சண்முகம் அண்ணாச்சி, பாலசந்தர் சார் போன்ற குருமார்களும் காரணம். இங்கு பலரும் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னதை மிகவும் கவனிப்புடன் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்க வேண்டும்.

இதே அன்பை என்னால் திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கையை, அன்பை கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன். என்னுடைய வாழ்க்கையில் என்னை பாதித்தவர்களைப் பற்றி தினமும் ஒரு முறை பேசுவேன். பாலசந்தர் பற்றி கே.எஸ்.ரவிகுமாருடன் படப்பிடிப்பில் இருக்கும் போது தினமும் ஒரு முறையாவது பேசிவிடுவேன்.

சந்திரஹாசனைப் பற்றி பேச வேண்டியதே இல்லை. ஏனென்றால் தினமும் அவர் எனக்கு நிழலாக இருப்பார். இயற்கை அவரை எடுத்துக் கொண்டது. ஆனால், என்னுள் ஒரு பாகமாக கலந்துவிட்டார். இருந்தவரை அனுபவித்ததையும், பெற்றதையும், கற்றதையும் நான் இருக்கும்வரை அனுபவிக்கத்தான் போகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் தொடர்ந்து வாழ்கிறேன்.

அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளாத விஷயங்களை எல்லாம் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அண்ணன் இல்லாத வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால், அதற்கான பயிற்சியை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பிறப்பு, மரணம் அனைவருக்கும் உண்டு. ஆனால், எப்படியிருந்தோம் என்பதை மற்றவர்கள் சொல்லிக்காட்டும்படி வாழ்ந்து போவது என்பது பெரிய விஷயம். என்னால் அதைச் செய்ய முடிகிறதா என்பதை முயல்கிறேன்"என்று கமல் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE