ஜோக்கர் மாதிரியான கதைகளை செதுக்க பலருக்கும் ஊக்கமளிக்கும்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

By ஸ்கிரீனன்

இந்த விருது இனிமேல் இத்தகைய கதைகளை செதுக்க பலருக்கும் ஊக்கமளிக்கும் என்று 'ஜோக்கர்' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார்.

கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தராஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.

'ஜோக்கர்' சிறந்த படமாக தேர்வானது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு "நாங்கள் படத்தை ஆரம்பித்தபோது எங்கள் நோக்கம், அத்திரைப்படம் அதிகப்படியான மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. நாங்கள் இப்போது பெருமகிழ்ச்சியில் இருக்கிறோம்.

இத்தகைய விருதுகள் எங்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும். அனைத்து விதமான ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இலக்கு. ஜோக்கர் தேசிய விருது பெறும் என ஏற்கெனவே பலரும் கூறினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைவிடவும் இப்படத்துக்கு விருது கிடைக்க வேண்டும் என விரும்பியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த விருது இனிமேல் இத்தகைய கதைகளை செதுக்க பலருக்கும் ஊக்கமளிக்கும். எங்கள் திறமையை அங்கீகரித்த மத்திய அரசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் பிரபு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE