‘இனம்’ படத்துக்கு யாரும் தடை கோர வேண்டாம்: சினிமா இயக்குநர் சங்கம் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

‘இனம்’ படத்தில் ஈழத்தமிழரின் போராட்டத்தை சிதைக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. எனவே அந்தப் படத்துக்கு எந்த அமைப்பும் தடைகோர வேண்டாம் என்று இயக்குநர் சங்கம் கூறியுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இனம்’ திரைப்படத்தில் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இலங்கை இறுதிகட்டப்போரில் சிறுவர், சிறுமியர் காதல் செய்துகொண்டிருப்பது போன்ற காட்சிகள் அமைத்திருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.

இலங்கை ராணுவத்தால் அப்பாவி மக்கள் 1.5 இலட்சம் பேருக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ‘இனம்’ படத்தில் தீவிரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டது போல் விளம்பரப்படுத்திவிட்டு இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது தக்க நடவடிக்கை எடுத்து படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இயக்குநர் சங்கம் சார்பில் நேற்று மாலை இயக்குநர் சங்கச் செயலாளர் ஆ.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இனம்’ திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிதைக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. சர்வதேச அளவில் ஈழத்தமிழர் பிரச்சினைகளை எடுத்துச்செல்லும் அளவில்தான் இருக்கிறது. அதனால் இந்தப்படத்துக்கு எந்த அமைப்பும் தடை கோர வேண்டாம். மீறி சில அமைப்புகள் தடை கேட்டால் அதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது. படம் வெளியாகும்போது அந்த அமைப்புகள் பிரச்சினைகளிலோ, அசம்பாவிதங்களிலோ ஈடுபட்டால் அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மாறுபட்ட கருத்துக்கொண்ட அமைப்புகள் மீண்டும் படத்தை பார்த்து, அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தெளிவு படுத்த தயாராக உள்ளோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE